கடற்படை தளத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இந்திய விமானப்படை தளபதி பதாரியா உயிர் தப்பி உள்ளார்.
அமெரிக்காவின் ஹவாய் துறைமுகத்தில் உள்ள இராணுவத் தளத்தில் நடைபெறும், மாநாடு ஒன்றில் கலந்துகொள்ளும்படி, இந்திய கடற்படைக்கு அமெரிக்கா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதற்காக, இந்திய விமானப்படை தளபதி பதாரியா, அவரது குழுவினர் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவின் ஹவாய் துறைமுகத்திற்கு சென்றனர். அங்கு, அவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர்.
அப்போது, அந்த துறைமுகத்தில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில், திடீரென்று துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவன், அமெரிக்கா துறைமுக அதிகாரியின் சீருடை அணிந்திருந்ததாகவும், கண்மூடித்தனமாகச் சுட்டுவிட்டு, பின்னர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில், 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிரமாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றபோது, இந்திய விமானப்படை தளபதி பதாரியா மற்றும் அவரது குழுவினர் அங்கிருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் யாருக்கும் எதுவும் ஆகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹவாய் துறைமுகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, ஹவாயில் உள்ள பியர்ல் துறைமுக ராணுவ தளம் உடனடியாக மூடப்பட்டது.