நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில், இந்திய அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று வருகிறது.
இதில், முதல் 3 போட்டிகளில் இந்திய அணி வெற்றிப் பெற்று, தொடரைக் கைப்பற்றிய நிலையில், இன்று 4 வது போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் ரோகித் சர்மா, ஷமி, ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அதன்படி, முதலில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிக பட்சமாக மணிஷ் பாண்டே 36 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக, கே.எல்.ராகுல் 39 ரன்கள் சேர்த்தார். கேப்டன் விராட் கோலி உள்பட மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. ஆனால், அந்த அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்த போட்டி சமனில் முடிந்தது. கடைசி ஓவரில் மட்டும் மொத்தம் 4 விக்கெட் வீழ்ந்தன.
இதனால், சூப்பர் ஓவர் வழங்கப்பட்டது.
சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, ஒரு விக்கெட் இழப்பிற்கு 13 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து, 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிமையான இலக்குடன் இந்திய அணி சார்பில் கேப்டன் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் களமிறங்கினர்.
அதன்படி, முதல் பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட கே.எல். ராகுல், 2 வது பந்தை பவுண்டரிக்கு விளாசினார். பின்னர், 3 வது பந்தில் ஆட்டம் இழந்தார்.
இதனைத்தொடர்ந்து, கோலி முதல் பாலில் 2 ரன்களும், அடுத்த பந்தில் பவுண்டரியும் அடித்து, இந்திய அணியை த்ரில் வெற்றிபெற வைத்தார். இதனால், இந்திய அணியின் வெற்றியை, கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.