இந்தியாவில் ஊரடங்கின் நோக்கம் தோல்வி அடைந்துவிட்டதாகக் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, வரும் 31 ஆம் தேதி வரை 4 வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த முறை பல்வேறு பணிகளுக்கும் தளர்வுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இது தொடர்பாக ஆன்லைன் மூலம் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, “கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் 4 கட்டங்களும், முற்றிலுமாக தோல்வி அடைந்துள்ளதாக” குறிப்பிட்டார்.
“ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைந்துவிடும், நோயாளிகள் குறைந்துவிடுவார்கள் என்று, பிரதமர் மோடியும் அவரின் ஆலோசனை அதிகாரிகளும் கூறினார்கள். ஆனால், நாட்டில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையவில்லை” என்றும், ராகுல்காந்தி சுட்டிக்காட்டினார்.
“ஊரடங்கால் எந்த பலனும் கிடைக்கவில்லை” என்று தெரிவித்த ராகுல்காந்தி, “கொரோனா பாதிப்பைச் சமாளிக்கும் வகையில், அவற்றை எதிர்கொள்ளும் வகையில், மத்திய அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது” என்றும், கேள்வி எழுப்பினார்.
மேலும், “கொரோனா நோயைக் கட்டுப்படுத்திவிட்டோம் என்று மத்திய அரசு நினைத்து வருவதாகக் குற்றம்சாட்டிய ராகுல், உண்மையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டு வந்த ஊரடங்கு திட்டம் தோல்வி அடைந்துவிட்டது” என்றும் சுட்டிக் காட்டினார்.
குறிப்பாக, “கொரோனா தடுப்பு நடவடிக்கையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும், மத்திய அரசு அடுத்து என்ன செய்யப்போகிறது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியமான ஒன்று” என்றும் ராகுல்காந்தி கூறினார்.
அத்துடன், “கொரோனா தடுப்பு பணியில் அடுத்த மாற்றுத்திட்டம் என்ன என்பது குறித்து மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்” என்றும் ராகுல்காந்தி வலியுறுத்தினார்.
“இந்தியா தற்போது எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் ஊரடங்கின் தோல்வியே என்றும், பிரதமர் மோடி எதிர்பார்த்த முடிவுகளை இந்தியாவில் ஊரடங்கு தரவில்லை என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது” என்றும், ராகுல்காந்தி பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.