உலகில் அதிக காற்று மாசு படிந்த நகரங்கள் பட்டியலில், இந்தியாவின் 14 நகரங்கள் இடம் பெற்றுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் அதிக காற்று மாசு படிந்த நகரங்கள் தொடர்பாக, உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தான், முதல் 20 நகரங்களின் பட்டியலில்.. இந்தியாவின் 14 நகரங்கள் இடம் பெற்றுள்ள தகவல் தெரியவந்துள்ளது.

அதிக அளவிலான காற்று மாசுக்குப் பெயர்போன சீனாவின் பீஜிங் நகரம், மாசு அளவை பெரும்பாலும் குறைத்துவிட்டது. இந்த பட்டியலில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 89 வது இடத்திலிருந்த பீஜிங் நகரம், தற்போது 199 வது இடத்தில் உள்ளது.

ஆனால், இந்த பட்டியலில் 100 இடங்களைத் தாண்டியிருந்த இந்தியாவின் முக்கிய நகரங்கள் பல, முதல் 20 மாசு படிந்த நகரங்களின் பட்டியலில், 14 இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளது தான், நம்ப முடியாத அதிர்ச்சியாக இருக்கிறது.

அதன்படி, இந்த பட்டியலில் தலைநகர் டெல்லி 5 வது இடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்த நிலையில், மோசமான காற்று மாசு கொண்ட இந்திய நகரமாக டெல்லியின் புறநகர் பகுதியான காசியாபாத் திகழ்கிறது.

இதற்கு அடுத்தபடியாக வாராணசி, கான்பூர், ஃபரீதாபாத், கயா, பாட்னா, ஆக்ரா, முசாஃபர்பூர், ஸ்ரீநகர், குருகிராம், ஜெய்ப்பூர், பாட்டியாலா, ஜோத்பூர் ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

இந்த குறிப்பிட்ட நகரங்களில் பி.எம். 2.5 எனும் நச்சு நுண் துகள்கள் காற்றில் அதிக அளவில் காணப்படுவதாகவும், இதைச் சுவாசித்தால் இதய நோய், நுரையீரல் புற்றுநோய், உள்ளிட்ட நோய்கள் அதிக அளவில் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், உலகம் முழுவதும் 10 ல், 9 பேர் மாசு படித்த காற்றைச் சுவாசிப்பதாகவும், இதன் காரணமாக ஆண்டுதோறும் 70 லட்சம் பேர் வரை உயிரிழக்கிறார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில், இந்த அளவுக்கு மாசு அதிகரிக்க முக்கிய காரணமாகத் தொழிற்சாலை மூலமாக 26 சதவீத மாசும், வாகனங்கள் மூலம் 21 சதவீத மாசும், சீரற்ற சாலைகளால் 15 சதவீத மாசும், பரவுவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.