'ஈபிஸ் - ஓபிஎஸ்ஐ அரவணைத்து செல்ல விரும்புகிறேன்” என்று, சசிகலா ஓபனாக பேசி உள்ள நிலையில், “சசிகலாவால் அதிமுகவை வீழ்த்த முடியாது” என்று, எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைச்சாலைக்குச் சென்றது வந்தது முதல், அதிமுகவில் அடுத்தடுத்து பல
அதிரடியான திருப்பங்கள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.

அதன் படி, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிமுக தொண்டர்கள் இடையே சசிகலா
தொலைப்பேசியில் பேசி வரும் உரையாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது.

அதிமுக தொண்டர்களிடம் சசிகலா தொடர்ச்சியாக பேசி வருவதில் பல்வேறு விசயங்கள் பதிவுகளாக உள்ளன. அதன் படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு
அதிமுக தொண்டர் ஒருவரிடம் சசிகலா பேசிய ஆடியோவில், “தமிழகத்தில் ஊரடங்கு முடிந்ததும், அம்மா நினைவிடம் செல்வேன் என்றும், அங்கிருந்து தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்களைச் சந்திக்க சுற்றுப் பயணம் செல்கிறேன்” என்றும், சசிகலா பேசியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, நேற்றைய தினம் அதிமுக தொண்டர் ஒருவருடன் சசிகலா பேசும் புதிய ஆடியோ ஒன்று, வெளியாகி மீண்டும் வைரலாகி உள்ளது.

அதாவது, சங்கரன்கோவிலை சேர்ந்த அதிமுக தொண்டர் கலைச்செல்வனுடன் தொலைபேசி வாயிலாக பேசிய சசிகலா, “நல்லபடியாக கழகத்தை கொண்டு சென்று அம்மா ஆட்சியை மீண்டும் வர வைக்க வேண்டும் என்றும், ஊரடங்கு முடிந்ததும், நான் அனைவரையும் சந்திப்பேன்” என்று, மீண்டும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், “எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரையும் அரவணைத்து செல்லவே நான் விரும்புகிறேன்” என்றும், அவர் சுட்டிக்காட்டி
பேசினார்.

அத்துடன், “அதிமுக தொண்டர்களின் விருப்பப்படி கட்சியை வழி நடத்துவேன் என்றும், எம்.ஜி.ஆர் ஜெயலலிதா காட்டிய வழியில் கண்டிப்பாக செல்வேன்” என்றும், சசிகலா பேசியிருந்தார்.

தமிழக அரசியலில், சசிகலாவின் அடுத்த அரசியல் ரீ என்ட்ரி பயணம் தொடங்கி உள்ள நிலையில், “எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரையும் அரவணைத்து செல்லவே” என்று சசிகலா பேசி உள்ளது, அக்கட்சிக்குள் அடுத்தடுத்து பரபரப்பான சூழலுக்கு வித்திட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, சேலம் மாவட்டம் எடப்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, “நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை திமுக ஏமாற்றி விட்டதாக” குற்றம்சாட்டினார்.

குறிப்பாக, “சசிகலா இருந்த போதும் அதிமுக தேர்தலில் தோல்வியை சந்தித்து உள்ளது என்றும், எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் சசிகலாவால் அதிமுகவை வீழ்த்த முடியாது” என்றும், அவர் சூளுரைத்தார்.

அத்துடன், “கொரோனா தொற்று பரவத் தொடங்கிய ஆரம்பகட்டத்தில், போதுமான விழிப்புணர்வு இல்லாததால், கொரோனா தடுப்பூசிகளின் வீணடிக்கப்பட்டன” என்றும், எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதனிடையே, சசிகலா சற்று இறங்கி வருவதும், எடப்பாடி பழனிசாமி சற்று எகிறுவதுமாக அதிமுக அரசியல் பயணம் தற்போது நகர்ந்துகொண்டிருப்பது
குறிப்பிடத்தக்கது.