சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 25-ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கியது. இதனால் தமிழகத்தில் டெல்டா மற்றும் வடகடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய துவங்கியது. இதன்பின்னர் கடந்த 5 தினங்களுக்கு முன்பு உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
இதையடுத்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, கடந்த இரு தினங்களுக்கு முன்னர் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறிய நிலையில், நேற்றிரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு அருகே இன்று மாலை கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், சென்னையில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை இரவு முழுவதும் விடிய, விடிய கொட்டித் தீர்த்தது.
மேலும் தற்போது வரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையின் முக்கிய சாலைகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், பெய்து வரும் தொடர்கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஏற்கனவே 4 நாட்கள் விடுமுறை விட்டப்பட்ட நிலையில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சென்னையில் அண்ணாநகர், மாம்பலம், ஈக்காட்டுதாங்கல், கிண்டி, வேளச்சேரி, சாலிகிராமம், அம்பத்தூர், சூளைமேடு, கிண்டி, தரமணி, மயிலாப்பூர், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்துவருகிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னை அருகே கரையை கடந்து செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று அதி கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
அதேபோல் நாளை (12.11.2021) நீலகிரி, கோவை, கன்னியாகுமரியிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது. தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும், தமிழக கடற்கரை பகுதி, தெற்கு ஆந்திர கடலோர பகுதியில் மணிக்கு 45 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் அறிவித்திருக்கிறது.