தமிழ்நாட்டில் தொடர் கனமழை காரணமாக 8 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தொடங்கியது முதல் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
இவற்றுடன், தமிழக வங்க கடல் ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக பெரம்பலூர், திருவண்ணாமலை, அரியலூர், விழுப்புரம். கடலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று, மழை எதிரொலியாக கொடைக்கானலிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதாவது, தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கிறது. இவை, அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும் என்றும், கடந்த சில நாட்களுக்கு முன் வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இதன் காரணமாகவே, “தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வருகிற நவம்பர் 4 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், சில மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்” என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் கிட்டதட்ட 586 நாட்களுக்கு பிறகு 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு நேற்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதால், பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து மாணவர்களை வரவேற்று மகிழ்ந்தார்கள்.
இப்படியாக, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் நேற்றைய தினம் திறக்கப்பட்ட நிலையில், கடலூரில் தொடர் கனமழையால் நேற்று அங்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, நேற்று முதல் விடைவிடாது கொட்டி தீர்த்த கனமழையால் நெல்லை, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதே போன்று மழை எதிரொலியாக திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை மற்றும் செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்றைய தினம் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.