அதிகாரிகளை பார்த்தால் மட்டுமே முககவசம் அணிகின்றனர் என்றும், தற்போது பொதுமக்களிடையே முககவசம் பயன்படுத்தும் முறை குறைந்துள்ளது எனவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமினை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- ``தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணி முழுவீச்சில் நடைபெறுகிற காரணத்தால், எத்தனை பேருக்கு பரிசோதனை செய்கிறோமோ அதில் 10 விழுக்காடு மட்டுமே தொற்று உறுதி செய்யப்படுகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் 6 விழுக்காடுக்கும் கீழ் குறைந்துள்ளது. அந்தவகையில் சென்னையின் சில மண்டலங்கள் மற்றும் கோவை, சேலம், தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் தனி கவனம் செலுத்தி கண்காணிக்கப்படுகிறது" என்றார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தண்டையார்பேட்டையில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதியில் நடந்த மருத்துவ முகாமினை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர், ``கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக நடந்ததால், தமிழகம் முழுவதும் தொற்று உறுதி ஆகும் சதவீதம் குறைந்திருக்கிறது. சென்னையில் ஒரு சில பகுதிகள் மற்றும் கோவை, சேலம், தஞ்சாவூர், கடலூர் தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், மக்களிடம் மாஸ்க் பயன்படுத்துவது குறைந்து வருவதால், அபராதம் விதிப்பதோடு, அனைத்து மாவட்டங்களிலும், நோய் தொற்றை கட்டுப்படுத்த மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா அறிகுறி வந்தவுடன் பரிசோதனை செய்துகொண்டால் தான், நோயை முழுமையாக குணப்படுத்த முடியும். நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வழிகளை பின்பற்றாத போது, தொற்று அதிகரிக்கிறது.
இறப்பு, விருந்து, திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும், கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு செல்லும் போது தொற்று ஏற்படுகிறது. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம். மழைக்காலங்களில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் வடசென்னை பகுதிதான் எடுத்துக்காட்டாக செயல்பட்டு, கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சாதாரண காய்ச்சல் என நினைத்து மக்கள் மாஸ்க் அணியாமல் இருக்கிறார்கள் எனவும், மாஸ்க் அணியாமல் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் நிலையும் தொடர்கிறது. 35 சதவிகித மக்கள் மாஸ்க் அணியாத நிலை இருக்கிறது" என்று தெரிவித்தார் ராதாகிருஷ்ணன்.
மேலும் பேசியபோது, ``தற்போது முகக்கவசம் பயன்படுத்தும் நிலை சற்று குறைந்துள்ளது. இதை அதிகரிக்கும் நோக்கத்தில் ஒரு பக்கம் அபராதம் வசூல் செய்தாலும் கூட வீடு வீடாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மருத்துவமனையில் நோய் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமையை எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. முன்கூட்டியே அறிகுறிகள் வரும் போது சோதனை செய்தால் அதை முழுமையாக குணப்படுத்த முடியும்.
அதனால் இறப்பு விகிதம் 1.2 ஆக குறைந்துள்ளது. அதை 1 சதவீதத்திற்கு குறைவாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கண்டிப்பாக முகக்கவசம் அணியுங்கள், தேவையில்லாத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம், கூட்டம் இருக்கும் இடத்தில் சமூக இடைவெளியை பின்பற்றுங்கள், கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் முகக்கவசத்தை இறுக்கமாக அணிந்து கொள்ளுங்கள் போன்ற அறிவுரைகளை வழங்கி வருகிறோம். அதிகாரபூர்வமாக இன்று அதிகரிக்கும், நாளை குறையும் என்பது இல்லை.
மேலும், கணக்கீடு செய்பவர்கள் செய்துகொண்டு தான் இருப்பார்கள். தற்போது மருத்துவமனையில் 45 ஆயிரத்துக்குள் தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை கழுவுதல், சமூக இடை வெளியை கடைபிடிப்பது போன்றவை முறையாக பின்பற்ற வேண்டும். அதைப்போன்று ஒவ்வொரு துறைக்கும் வழிகாட்டு முறைகள் வெளியிடப்பட்டுள்ளது" என்றும் கூறியிருக்கிறார் அவர்