மே 18 ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம் என்று, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக, கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி மாலை முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

எனினும் கொரோனாவின் வீரியம் சற்று குறையாத நிலையில், தற்போது 3 வது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனிடையே, நாளை மறுநாள் முதல் ஊரடங்கு முடிவடையும் நிலையில், 4 வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று, பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.

எனினும், கடந்த சில வாரங்களாகவே, ஊரடங்கு நேரத்தில் பல தளர்வுகளும் ஒன்றின் ஒன்றா மத்திய - மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, “வரும் 18 ஆம் தேதி திங்கள் கிழமை முதல், 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படலாம்” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், “வாரத்தின் ஆறு நாட்களும் அரசு அலுவலகங்கள் செயல்படும் என்றும் தமிழக அரசு, தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, “ஊழியர்கள் 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு 2 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“அலுவலகத்திற்கு பணிக்கு வராத ஊழியர்கள், மின்னணு முறையில் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும், தேவையான போக்குவரத்து வசதி செய்து தரப்படும்” என்றும், தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.