நரிக்குறவர் குடும்பத்தை நடுவழியில் இறக்கி விட்ட அரசு பேருந்து டிரைவர் மற்றும் கண்டக்டர் இருவரும் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அடுத்து உள்ள வாணியக்குடி பகுதியைச் சேர்ந்த செல்வமேரி என்ற பெண், அந்த பகுதியில் மீன் வியாபாரம் செய்து வந்த நிலையில், கடந்த வாரம் இவர் குளச்சல் பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டுக்குச் செல்வதற்காக மீன் கூடைகளுடன் பேருந்தில் ஏறியபோது “பேருந்தில் துர்நாற்றம் வீசுவதாக” கூறி, பஸ் கண்டக்டர் அவரை கீழே வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டார்.
இது குறித்து வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி நிலையில், சர்ச்சையில் சிக்கிய அரசு பேருந்து கண்டக்டர் மற்றும் அந்த பேருந்தின் டிரைவர் உள்பட 3 பேர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் பரபரப்புகள் அடங்குவதற்குள், அரசு பேருந்தில் பயணம் செய்த நரிக்குறவர் குடும்பத்தினர் நடுவழியில் கண்டக்டரால் இறக்கிவிடப்பட்ட சம்பவம் நடந்து மீண்டும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது, நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் 7 வயதுடைய பெண் குழந்தை என 3 பேர் சேர்ந்த ஒரு நரிக்குறவர் குடும்பத்தினர், நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் நேற்று மாலை நின்று கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு திருநெல்வேலி செல்லும் அரசு பேருந்து ஒன்று வந்து உள்ளது. உடனே, அதில் நரிக்குறவர் குடும்பத்தினர் 3 பேரும் ஏறி இருக்கையில் அமர்ந்து தாங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு புறப்பட தயார் ஆனார்கள்.
ஆனால், அந்த பேருந்து வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்ற நிலையில், அடுத்த சிறிது நேரத்தில் பேருந்தில் இருந்த நரிக்குறவர் குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவிக்கு இடையே சற்று வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதனால், கணவன் - மனைவி உள்பட 3 பேரையும் அந்த அரசு பேருந்தில் இருந்து அந்த பேருந்தின் கண்டக்டர் கீழே இறக்கி விட்டு உள்ளார்.
அப்போது, அவர்கள் பேருந்தை விட்டு கீழே இறங்க மறுத்ததால், அந்த நரிக்குறவர் குடும்பத்தின் உடைமைகளையும் பேருந்தில் இருந்து வெளியே தூக்கி வீசி உள்ளார் அந்த கண்டக்கடர்.
அந்த நேரத்தில், நரிக்குறவர் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை பயந்து கதறி அழுதுள்ளது. அப்போது, அவர்கள் 3 பேரும் அந்த அரசு பேருந்தில் இருந்து ஒவ்வொருவராகக் கீழே இறக்கி விட்டுள்ளனர். இந்த காட்சிகளை அங்கு நின்றுகொண்டிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளனர்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பெரும் வைரலான நிலையில், இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகள் கவத்திற்குச் சென்று உள்ளது.
இந்த நிலையில் தான், நரிக்குறவர் குடும்பத்தைப் பேருந்தில் இருந்து இறக்கி விட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், திருவட்டார் பகுதியைச் சேர்ந்த பேருந்தின் டிரைவர் 45 வயதான நெல்சன், 44 வயதான கண்டக்டர் ஜெயதாஸ் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து, அரசு போக்குவரத்துக் கழக நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் அரவிந்த் அதிரடியாக உத்தரவிட்டார். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.