தன்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துப் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பப்ஜி மதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அரசால் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை, சட்ட விரோதமாகப் பதிவிறக்கம் செய்து சில கும்பல்கள் விளையாடி வந்த நிலையில், “பப்ஜி விளையாட்டில் உள்ள ட்ரிக்ஸ்” பற்றி பேசுவதற்காகக் கடந்த 2019 ஆம் ஆண்டு மதன் என்ற இளைஞர், யூடியூப் சேனல் ஒன்றை உருவாக்கினார். தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாகக் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதால், சமூக வலைத்தளங்களில் சிறுவர், சிறுமிகள் அதிகம் மூழ்கி இருந்தனர். இப்படியான சிறுவர் சிறுமிகளைக் குறிவைத்து ஆன்லைன் கேமான பப்ஜி, ப்ரீ ஃபையர் உள்ளிட்ட விளையாட்டில் நேரத்தைச் செலவிட்டு வந்தவர்களை, மதன் தன் பக்கம் அதிகமான கவனத்தை ஈர்த்தார்.
ஆன்லைனில் விளையாடும் போது, தன்னுடன் விளையாடும் சக போட்டியாளர்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளில் திட்டுவதை வாடிக்கையாகவே கொண்டிருந்த யூடியூபர் மதன், ஆன்லைனில் விளையாடுவது பெண்கள் என்றால், அவரது வார்த்தைகளில் ஆபாசம் நிறைந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இப்படி ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிட்டு வந்த மதன் மீது பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், தர்மபுரியில் பதுங்கியிருந்த பப்ஜி மதனை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
அத்துடன், பப்ஜி மதன் மீது கிட்டதட்ட 120 புகார்கள் ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், பப்ஜி மதன் மீது குண்டர் சட்டத்தின் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.
இந்த நிலையில், தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, மதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “எனது செயல்பாடுகளால் மாநிலத்தின் சட்டம் ஒழுங்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், பப்ஜி விளையாடுவது ஒரு போதும் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்தும் செயல் எனக் கூற முடியாது என்றும்” கூறியிருந்தார்.
மேலும், “நான் விளையாடியது இந்திய அரசால் தடை செய்யப்படாத கொரிய பப்ஜி விளையாட்டு என்றும், தனது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் தொழில் போட்டியாளர்கள், தனது வீடியோவை எடிட் செய்து பதிவேற்றம் செய்து உள்ளதாகவும், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துப் பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் தனக்கு முறையாக வழங்கப்படவில்லை” என்றும், அவர் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதி பி.என். பிரகாஷ் தலைமையிலான அமர்வில், வரும் 9 ஆம் தேதி திங்கள் கிழமை விசாரணைக்கு வருகிறது. இதனால், மதன் தாக்கல் செய்த
ஆட்கொணர்வு மனு பற்றிய செய்தி, இணையத்தில் வைரலாகி வருகிறது.