பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சிறுமி, நீதி கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா மாநிலம் பிபி.நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்த 18 வயதுக்கு உட்பட்ட சிறுமி ஒருவர், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார்.

இதனிடையே, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறுமி மீது தவறான கண்ணத்துடன் அணுகி உள்ளார். மேலும், சிறுமி வீட்டில் யாரும் இல்லாத நிலையில், அந்த இளைஞர் சிறுமியைக் கடுமையாகத் தாக்கியும் மிரட்டியும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த சிறுமி, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், குறிப்பிட்ட அந்த இளைஞன் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை தேடி வருவதாகவும் கூறினர்.

அத்துடன், சிறுமியும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அந்த இளைஞனும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அந்த கிராமத்தில் உள்ள பெரிய மனிதர்கள் மூலம் பஞ்சாயத்துப் பேசி உள்ளனர்.

பஞ்சாயத்துக் காரணமாக, சிறுமியின் வீட்டில் அந்த குறிப்பிட்ட இளைஞன் மீது நடவடிக்கை எதுவும் வேண்டாம் என்று கூறியதாகத் தெரிகிறது. ஆனால், பாதிக்கப்பட்ட சிறுமியோ, அந்த இளைஞன் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடைசி வரை உறுதியாக இருந்துள்ளார். அந்த நேரத்தில், போலீசார் அந்த இளைஞனைத் தேடி வந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அந்த இளைஞன் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வாங்கியதாகத் தெரிகிறது.

இதனால், அந்த இளைஞனை போலீசாரால் கைது செய்ய முடியவில்லை. இதனையடுத்து, அந்த இளைஞன் ஊருக்குள் சுதந்திரமாகச் சுற்றிக்கொண்டு திரிந்துள்ளார். அந்த இளைஞனைப் பார்க்கும் போதெல்லாம் அவனைத் தண்டிக்க முடியவில்லையே என்று, பாதிப்புக்கு உள்ளான சிறுமி, கடும் கோபப்பட்டுள்ளார்.

இதனால், கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக அந்த சிறுமி கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இது தொடர்பாகத் தனது பெற்றோரிடம் சிறுமி அவ்வப்போது, கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக வீட்டில் யாரிடமும் சரிவரப் பேசாமல் இருந்த சிறுமி, மன உளைச்சலின் உச்சிக்கே சென்றுள்ளார். அந்த நேரம் பார்த்து, நேற்று வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்த நிலையில், சிறுமி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து, குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்து உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், குறிப்பிட்ட அந்த இளைஞனை போலீசார் கைது செய்யாமல் மெத்தனமாகச் செயல்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இதனிடையே, சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி ஒரு வருடம் காலம் ஆகியும் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத விரக்தியில் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம், அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.