காதலிக்க மறுத்த காதலியின் தோழியை, பீச்சுக்கு கூட்டி போய் கத்தி முனையில் மிரட்டிய இளைஞனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் தான் இப்படி ஒரு பரபரப்பான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
சென்னை புளியந்தோப்பு கே.எம். கார்டன் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர், 12 ஆம் வகுப்பு முடித்து விட்டு, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்.
இப்படியா நிலையில், நேற்று முன் தினம் 7 ஆம் தேதி மாலை, வேலை முடிந்து சூளை அஷ்டபுஜம் சாலை வழியாக அந்தப் பெண் வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, பக்கத்துத் தெருவைச் சேர்ந்தவரும், தனது தோழியின் காதலனுமான ஆட்டோ ஓட்டுநரான 25 வயதான தினேஷ் என்ற இளைஞர், ஆட்டோவில் வந்து உள்ளார். “நானே உன்னை வீட்டில் விட்டு விடுகிறேன்” என்று, கூறி, அந்த பெண்ணை தனது ஆட்டோவில் ஏற்றி உள்ளார்.
பின்னர், அந்த பெண்ணின் வீட்டிற்குச் செல்லாமல், எண்ணூர் கடற்கரைக்கு அழைத்துச் சென்று உள்ளார். அங்கே, “என் மனைவி என்னை ஏமாற்றி விட்டு சென்று விட்டார் என்றும், உன்னை பார்த்தால் என் மனைவி போல் உள்ளது” என்றும் கூறி, அந்த பெண்ணை காதலிக்கச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்.
“இதே, சோக கதையை தனது தோழியிடம் கூறி, அவரை காதல் வலையில் வீழ்த்திய விசயத்தை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்ததால்” உஷாரான அந்த பெண், தனது அம்மாவிற்கு செல்போன் மூலமாக, இந்த விசயத்தை தெரிவித்து உள்ளார்.
அத்துடன், “தனது அம்மா போலீசாருடன் சம்பவ இடத்திற்கு வந்து தன்னை மீட்டுச் செல்வார்” என்று அந்த பெண் எண்ணியிருந்த நிலையில், அந்த இளைஞன் அந்த பெண்ணை கத்தி முனையில் மிரட்டி, அங்கிருந்து தனது ஆட்டோவில் அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு, எண்ணூரில் ஒரு வீட்டில் அடைத்து வைத்து, “திருமணம் செய்துகொள்ளச் சொல்லி” தனது கையை அறுத்துக்கொண்டு மிரட்டி உள்ளார்.
இதனால், இன்னும் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், மீண்டும் தனது அம்மாவிற்கு போன் செய்து, “தினேஷ், என்னை கடத்தி விட்டதாகவும், தற்பொழுது எண்ணூரில் ஒரு வீட்டில் இருப்பதாகவும்” கூறி அழுதிருக்கிறார்.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த தாயார், உடனடியாக புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், உடனடியாக விரைந்து வந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன் படி, அந்த இளம் பெண் இருந்த இடத்தை செல்போன் டவர் மூலமாகத் தெரிந்துகொண்டு, அந்த பெண்ணை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
மேலும், கடத்தலில் ஈடுபட்ட தினேஷின் செல்போன் எண்ணை வைத்து, அவர் சென்ட்ரலில் பதுங்கி இருப்பதைத் தெரிந்துகொண்டு, அங்கு விரைந்து சென்ற போலீசார் கஞ்சா போதையிலிருந்த தினேஷ் மற்றும் அவனுக்கு உடந்தையாக இருந்த ஆட்டோ ஓட்டுநர் இம்ரான் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “கடந்த 3 வருடத்திற்கு முன்பாக தினேஷின் மனைவி பிரிந்து சென்று வேறு ஒருவருடன் வாழ்ந்து வருவதும், அது முதல் பல பெண்களிடம் பேசி, திருமணம் செய்யாமல் தினேஷ் குடும்பம் நடத்தி வந்ததும்” தெரிய வந்தது.
“அதே போல், தற்போம் இந்த 19 வயது இளம் பெண்ணிடமும் பேசி, தனது காதல் வலையில் வீழ்த்த முயன்ற போது, அந்த பெண் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்ததால், அந்த பெண்ணை கடத்திச் சென்றதும்” தெரிய வந்தது.
இதையடுத்து, இளம் பெண்ணை கடத்திய தினேஷ் மற்றும் இம்ரான் மீது கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.