“ஊரடங்கு விதிகளை மீறினால் இன்று முதல் கடும் நடவடிக்கை” எடுக்கப்படும் என்று, தமிழ்நாடு காவல் துறை கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தாக்கத்தின் 2 ஆம் அலை மிக தீவிரமாக வேகமாகப் பரவி வருகிறது. இதனால், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.
கடந்த 10 ஆம் தேதி முதல் வரும் 24 ஆம் தேதி வரை, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்துடன், காய்கறி கடைகள், அத்தியாவசிய கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சுமார் 1 லட்சம் காவல் துறையினர் கடந்த 10 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றுடன், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் காவல் துறையினர் ஒலிபெருக்கி மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் பொது மக்களுக்கு பல்வேறு அறிவுரைகளை கூறி, அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்றும், அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.
ஆனால், போலீசாரின் இந்த அறிவுரைகளைப் பின்பற்றாமல், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதலே ஏராளமானோர் வாகனங்களில் சென்று வந்ததையும், அதிகப்படியான மக்கள் நடமாட்டத்தையும் அன்றாடம் நாம் காண முடிகிறது.
இந்நிலையில், தமிழக காவல் துறை சார்பில் அறிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில், “இன்று முதல் முழு ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வாகனங்களில் வரும் மற்றும் நடமாடும் நபர்கள் மீது தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக, “தமிழக அரசின் அறிவுரைகளை பின்பற்றி கொரோனா தீவிரமாகப் பரவி வரும் இந்த காலகட்டத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு தங்களை உட்படுத்திக் கொள்ளாமல் பொது மக்கள் வீட்டிலேயே இருக்கும்படி” தமிழக காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அத்துடன், “பொது மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என்றும், கொரோனா பரவாமல் இருக்க முக கவசம் அணிவது, கிருமிநாசினி கொண்டு கைளை கழுவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது மற்றும் இதர அறிவுரைகளை பொது மக்கள் பின்பற்ற வேண்டும்” என்றும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதே போல், சென்னையில் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி முதல், நேற்று வரை அரசு அறிவித்த விதிமுறைகளைப் பின்பற்றாத நபர்கள், கடைகள், நிறுவனங்களிடம் இருந்து ஒரு கோடியே 34 லட்சத்து 46 ஆயிரத்து 390 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக” சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தமிழகத்தில், ஊரடங்கை இன்னும் கடுமையாக அமல்படுத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல் துறை உயர் அதிகாரிகளுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.