சென்னை வேளச்சேரியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை வேளச்சேரி புதிய தலைமைச்செயலக காலனி 2-வது தெருவைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர்
சேலம் மாவட்டம், ஆத்துார் அம்மம்பாளையத்தை சேர்ந்தவர். இவருக்கு 63 வயதாகிறது. 1983ல் ஐஎப்எஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்று, வனத்துறையில் சென்னை உட்பட பல இடங்களில் பணி புரிந்தவர். 2018-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

ஓய்வுபெற்ற பிறகு கடந்த அதிமுக ஆட்சியில், 2019ல், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக வெங்கடாசலம் நியமனம் செய்யப்பட்டார். 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் வெங்கடாச்சலம் ஓய்வு பெறவும் இருந்தார். செப்டம்பர் மாதம் 23-ம் தேதி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம், அவரது வீடு உட்பட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையை துவங்கினர். அதேபோல் அவரது வங்கி லாக்கரில் சோதனை நடத்தப்பட்டது. இந்த புகாரில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். அதிகார துஷ்பிரயோகம் செய்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வருவதாக ஏற்கனவே வெங்கடாசலம் மீது குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் அது குறித்து எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது.

மேலும் இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சுமார் 11 கிலோ தங்கம், 15 கிலோ சந்தன மரக்கட்டைகள் மற்றும் 6 கிலோ வெள்ளி பொருட்களும் இந்த சோதனையில் கண்டறியப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மாஜிக்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணம் ஒன்றில் சிபாரிசு காரணமாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் ஆட்கள் தேர்வு மற்றும் டெண்டர் விவகாரம் குறித்த பதிவுகள் சிக்கியதாகவும், அதனால்தான் வெங்கடாசலம் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வேளச்சேரியில் உள்ள தனது வீட்டில் இருந்த வெங்கடாசலம் நேற்று மதியம் மாடியில் உள்ள படுக்கை அறைக்கு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் கீழே இறங்கி வரவில்லை. இதனால் அவருடைய மனைவி வசந்தி, மாடிக்கு சென்று பார்த்தபோது படுக்கை அறை கதவு உள்புறமாக பூட்டி இருந்தது. நீண்டநேரம் கதவை தட்டியும் வெங்கடாசலம் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அவர் அங்கு படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் வேட்டியால் வெங்கடாசலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் வேளச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 2 மணிநேர விசாரணைக்கு பிறகு போலீசார் வெங்கடாசலம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கொடுக்கப்பட்ட மன அழுத்தம் காரணமாக வெங்கடாசலம் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா? என பல்வேறு கோணங்களில் வேளச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர் கடந்த சில நாட்களாகவே கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாகவும், சோதனையின்போது ஏராளமான பணம், நகைகள் பறிபோனதால், வெங்கடாச்சலத்துக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி இதுகுறித்து தகராறு நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுவும் மன உளைச்சலுக்கு காரணமாகி உள்ளது. இதனிடையே தன் மனைவிக்கு 3 லட்ச ரூபாயையும், வீட்டில் பணிபுரியும் வேலைக்கார பெண்மணிக்கு சிறிது பணத்தையும் வெங்கடாச்சலம் தந்திருக்கிறார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.