“பாலியல் புகாரில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டனை அதிமுகவில் இருந்து நீக்காதது ஏன்?” என்று, புகழேந்தி கேள்வி எழுப்பி உள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியின்போது தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டனுக்கு எதிராக, துணை நடிகை சாந்தினி, காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு பாலியல் புகார் ஒன்றை கடந்த மாதம் அளித்தார்.
அந்த புகாரில், “அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன், கடந்த 5 ஆண்டுகளாக
என்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, 3 முறை கட்டாய கருக்கலைப்பு செய்து, என்னை மோசடியாக ஏமாற்றி உள்ளதாக” பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
நடிகையின் இந்த பாலியல் புகாரின் பேரில் சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், 6 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக, தலைமறைவாக உள்ள மணிகண்டனை பிடிக்க தற்போது 2 தனிப்படை அமைக்கப்பட்டன. இதில், ஒரு தனிப்படை போலீசார் மதுரைக்கு விரைந்து சென்று அங்கு தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், மற்றொரு தனிப்படை போலீசார் ராமநாதபுரத்திற்கும் விரைந்து சென்று, அங்கு தீவிர விசாரணை நடத்தினர். அங்கு போலீசாருக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன், பெங்களூரில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
பெங்களூருவில் கைது செய்யப்பட்ட மணிகண்டன், அன்றைய தினமே சென்னை அடையாறு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, பின்னர் அவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை, வரும் ஜூலை 2 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் அடைக்க, சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், அவர் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் தான், துணை நடிகை சாந்தினி அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து உள்ளார்.
இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், “அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் மனுவில் அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையம் பதிலளிக்க” சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
அத்துடன், “பிணை மனு மீதான விசாரணையை ஜூன் 24 ஆம் தேதிக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்தி வைத்து உள்ளது.
இதனிடையே, “பாலியல் புகாரில் கைதாகியுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனை அதிமுகவிலிருந்து நீக்காதது ஏன்?” என்று, சமீபத்தில் அதிமுகவில் இருந்து புகழேந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், “மணிகண்டனுக்கு அதிமுக துணை போவது ஏன்? என்பது, உரிய விசாரணைக்கு பிறகு அனைவருக்கும் தெரியவரும்” என்றும், அவர் கூறியுள்ளார்.