திமுக நிர்வாகியை தாக்கியதாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணைக்கு வரும் நிலையில், மீண்டும் அவர் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக நள்ளிரவில் கைது செய்யப்பட்ட நிலையில், மார்ச் மாதம் 7 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதாவது, சென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்ட சஞ்சீவிராயன் கோயில் தெருவில் இருக்கும் 49 வது வார்டு வாக்குச்சாவடி மையத்தில் நரேஷ் என்ற நபர், அத்துமீறி புகுந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர், அவரது சட்டையை கழற்றி, அரை நிர்வாணப்படுத்தி அடித்து இழுத்து பேரணியாக அழைத்து வந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இதுபற்றி தனது ஃபேஸ்புக் வலைதளத்திலும் ஜெயக்குமார் வெளியிட்டார். அத்துடன், பொது இடத்தில் ஒரு மனிதனை அரை நிர்வாணப்படுத்தி, அடித்து இழுத்து பேரணியாக அழைத்துச் சென்றதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அதே நேரத்தில், அதிமுகவினரால் தாக்கப்பட்ட நரேஷ் என்ற நபர், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது, பாதிக்கப்பட்ட நரேஷ், இது தொடர்பாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில் தான், இந்த வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

அதன் படி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மார்ச் மாதம் 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ஜார்ஜ் டவுண் 15 வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முரளி கிருஷ்ணா அதிரடியாக உத்தரவிட்டார்.

அதன் தொடர்ச்ச்சியாக, ஜெயக்குமார் கைதுக்கு கண்டனம் தெரிவித்து அவரது மனைவி, மகன் மற்றும் ஓபிஎஸ் - இபிஎஸ் கடுத்துடத்து கடும் கண்டனங்கள் தெரிவித்து ஊடங்களில் பேசி வந்தனர்.

குறிப்பாக, சிறையில் பெரும் சிரமத்துக்கிடையில் ஜெயக்குமார் அவதிப்பட்டு வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், சென்னை பூந்தமல்லி கிளைச் சிறையில் உள்ள அவரது ஜாமீன் மனு இன்றைய தினம் விசாரணைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் தான், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பான மற்றுமொரு வழக்கில் சென்னை காவல்துறை மீண்டும் கைது செய்து உள்ளது.

இதனால், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு இன்றைய தினம் ஜாமீன் கிடைத்தாலும், அவர் விடுவிக்கப்படுவது சந்தேகம் என்றே கூறப்படுகிறது. இச்சம்வம், அதிமுகவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.