சென்னையில் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 32 வார்டுகளில் இருந்து வெற்றிபெறும் ஒரு பெண்தான் மேயராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நகர்ப்புற ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே சென்னை மேயராகப் போகும் முதல் பெண் பட்டியலினத்தவர் யார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே ஏற்பட்டுள்ளது.
மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் வார்டுகள் இட ஒதுக்கீடு பட்டியலை வெளியிட்டது சென்னை மாநகராட்சி. சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. அதில் 16 வார்டுகள் பட்டியலின பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வார்டுகள் வருமாறு: வார்டு எண்: 3, 16, 17, 18, 21, 22, 24, 45, 62, 72, 73, 99, 108, 117, 144, 200.
அதனைத்தொடர்ந்து 16 வார்டுகள் பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வார்டுகள் விவரம் வருமாறு: 28, 31, 46, 47, 52, 53, 59, 70, 74, 77, 85, 111, 120, 135, 159, 196. மேலும் இது தவிர பெண்கள் பொது பிரிவினருக்கு 84 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 100 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேயரை கவுன்சிலர்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள். எனவே பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 32 வார்டுகளில் இருந்து வெற்றிபெறும் ஒரு பெண்தான் மேயராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதேநேரம் பொது வார்டிலும் பட்டியலினத்தை சேர்ந்த பிரபலமான பெண்மணிகளை நிறுத்தி வெற்றிபெற செய்தும் வரலாறு படைக்கலாம். வேட்பாளர்கள் அறிவிப்பு, கவுன்சிலர்கள் தேர்வுக்கு பிறகே அந்த ரகசியம் வெளிவரும்.