உணவகம் ஒன்றில் பிரியாணியில் புகையிலையை வைத்து பணம் பறிக்க முயற்சி செய்திருக்கிறார் போலி நிரூபர்.
உத்தமபாளையம் நெடுஞ்சாலை சந்திப்பில் அமைந்துள்ள சிங்கப்பூர் மெஸ்ஸில் பிரியாணியில் புகையிலையை வைத்து, கடை உரிமையாளரை மிரட்டிப் பணம் பறிக்க முயன்றிருக்கிறார் போலி பத்திரிக்கையாளர் ஒருவர். இதைக் கண்டுபிடித்த கடை உரிமையாளர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.பின்பு சிங்கப்பூர் மெஸ் உரிமையாளர் நடந்த சம்பவம் குறித்து வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது உத்தமபாளையத்தில் தான் கடந்த 35 வருடமாக சிங்கப்பூர் மெஸ் என்ற உணவகத்தை மக்கள் மத்தியில் ஒரு நன் மதிப்போடும், தரமான, நியாயமான முறையில் நடத்தி வருவதாகவும், நேற்று 4.30 மணி அளவில் கடைக்கு சாப்பிட வந்த ஒருவர் பிரியாணியை வாங்கி அதில் அவரே புகையிலையை பிரியாணிக்கு அடியில் வைத்துள்ளார்.பின்பு அதை அவரே புகைப்படம் எடுத்துக்கொண்டு அதை வைத்து கடையில் உள்ள ஊழியர்களை மோசமாக திட்டியும் தகராறில் ஈடுபட்டும் உள்ளார்.
தகராற்றில் ஈடுபட்ட நபர் அப்போது குடிபோதையில் இருந்திருக்கிறார். கடையில் சத்தம் கேட்டகவும் வெளியே நின்றுக்கொண்டிருந்த கடை உரிமையாளர் உள்ளே சென்று பார்த்து பிரச்சனை குறித்து விசாரித்துள்ளார். பின்பு இதற்கு என்ன செய்வது என்று கேட்டபோது நானும் ஜெயா டிவி நிரூபரும் வந்துருக்கிறோம் , எனக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுங்க , ஜெயா டிவி ரிப்போர்டர் ரொம்ப மோசமானவர் என்று மிரட்ட ஆரம்பித்துள்ளனர். பணம் பறிக்க முயல்வதை அறிந்துக்கொண்ட கடை உரிமையாளர் நீங்கள் என்ன வேணாலும் செய்யுங்கள், எனக்கு பிரச்சனை இல்லை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
பின்பு அந்த தகராற்றில் ஈடுபட்ட நபர் பிரியாணியில் புகையிலை இருப்பதாக கூறி அவர் எடுத்த அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதைத் தெரிந்துக்கொண்ட கடை உரிமையாளர் அந்த போலி பத்திரிக்கையாளரைப் பிடித்து வந்து விசாரித்ததில் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இவை அனைத்தும் அந்த கடையில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியிருப்பதாகவும், அந்த வீடியோ காட்சிகளை காவல்துறையிடம் ஒப்படைத்து புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். இது போன்ற போலியான நபர்கள் பணம் பறிக்கும் நோக்கில் கடை உரிமையாளர்களை மிரட்டி வருவதை காவல்துறை விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுபோலவே கடந்த வருடம் பல சம்பவங்கள் நடந்துள்ளது. உணவகங்களுக்கு சென்று கடை உரிமையாளர்களை மிரட்டுவதற்கென ஒரு கும்பல் இப்படியான செயல்பாடுகளில் ஈடுபட்டுவருகிறது. இந்தநிலையில் நிரூபர் என்று பொய் சொல்லி நடந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.