தமிழகத்தில் கூடுதலாக 2 மணிநேரம் டாஸ்மாக் விற்பனை நீட்டிக்கப்பட்ட நிலையிலும், மேலும் வருவாய் குறைந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தமிழகத்தில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது வரை கொரோனா பரவல் குறையாத நிலையில், 4 வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, பல பணிகளுக்குத் தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன.

எனினும், நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, தமிழகத்தில் கடந்த வாரம் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. 2 நாட்கள் மட்டுமே டாஸ்மாக் கடைகள் திறந்திருந்த நிலையில், மதுபிரியர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை என்றும், மாஸ்க் அணிவது உள்ளிட்ட விதிமுறைகளைப் பின்பற்றுவது இல்லை என்றும், சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளுக்குத் தடை விதித்தது.

இதனை எதிர்த்து தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கியது.

இதன் காரணமாக, கடந்த 16 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அத்துடன், மதுபிரியர்கள் அனைவருக்கும் டோக்கன் முறையில் மதுபானங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே கடந்த 16 ஆம் தேதி மட்டும் தமிழகம் முழுவதும் 163 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையானது. இதனைத்தொடர்ந்து, கடந்த 17 ஆம் தேதி 133.1 கோடி ரூபாய்க்கு மட்டுமே விற்பனையானது.

இந்நிலையில், நேற்று முதல் தமிழகத்தில் கூடுதலாக 2 மணிநேரம் டாஸ்மாக் விற்பனை நேரம் நீட்டிக்கப்பட்டது. ஆனாலும், நேற்றைய மதுபானம் விற்பனையானது, 109.3 கோடி ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகி உள்ளது.

குறிப்பாக, 163 கோடி ரூபாயிலிருந்து 133 கோடி ரூபாயாகக் குறைந்த டாஸ்மாக் வருவாய் மேலும் குறைந்து, 109 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று மண்டலம் வாரியான மது விற்பனையானது, அதிகபட்சமாக மதுரையில் 28.6 ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. அதற்கு அடுத்தபடியாக, திருச்சியில் 26.4 கோடி ரூபாய்க்கும், சேலத்தில் 24.3 கோடி ரூபாய்க்கும், கோவையில் 22.5 கோடி ரூபாய்க்கும், சென்னை மண்டலத்தில் 6.5 கோடி ரூபாய்க்கும் மது விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.