தமிழக அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி தலையீட முற்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு, இன்று காலை அனைத்து துறை செயலாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்தார். இந்த சுற்றறிக்கை தான், தமிழக அரசியிலில் தற்போது பல்வேறு சந்தேகங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, “ஒவ்வொறு துறை ரீதியாகவும் மத்திய அரசு பங்களிப்புடன் நடைபெற்று வரும் திட்டங்கள் என்னென்ன?, மாநில அரசு திட்டங்களின் தற்போதைய நிலை என்ன?, அந்த திட்டங்கள் மூலம் பயன்பெற்ற பயனாளர்கள் விவரங்கள் என்ன?, திட்டம் பயன் அடைந்ததா? உள்ளிட்டவை குறித்து ஆளுநருக்கு விளக்கம் அளிக்கும் வகையில், அனைத்து துறை செயலாளர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்” என்று, அதில் இறையன்பு வலியுறுத்தி இருந்தார்.

மேலும், “கணிணி மூலம் திட்ட அறிக்கை தயார் செய்து வைத்திருக்க வேண்டும் என்றும், ஆளுநரை சந்தித்து விளக்கம் அளிப்பது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்” என்றும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

முக்கியமாக, தமிழகத்தின் ஆளுநர் ஆர். என். ரவியை கடந்த வாரம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சிலர் முக்கியமாக சந்தித்தது பேசினார்கள்.

அதன் தொடர்ச்சியாக, அடுத்த சில நாட்களிலேயே டெல்லி சென்ற தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, சமீபத்தில் தான் மத்திய அரசின் முக்கிய அமைச்சர்களை சந்தித்து பேசினார்.

இந்த நிலையில், அவர் தமிழகம் திரும்பிய நிலையில், “தமிழகத்தில் அனைத்து துறை சார்ந்த திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது” தமிகழத்தில் பெரும் பரபரப்பையும், அரசியலில் அதிகம் முக்கியதுவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது.

மிக முக்கியமாக, தலைமைச் செயலாளர் இறையன்பு, எழுதிய கடிதம் தான், தற்போது மிகப் பெரிய சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

அதுவும், “தமிழக அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலையீட முயல்வதாக” குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இது, தமிழக அரசியலில் பெரும் விவாத பொருளாகவும் மாறி உள்ளது.

குறிப்பாக, “ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?” என்று, அறிஞர் அண்ணா முழங்கிய முழக்கங்களையே, அவர் வழி வந்த திமுகவும் தற்போது ஆமோதித்து வருவதால், “ஆளுநர் விவகாரத்தில் கருணாநிதி ரூட்டை பின்பற்றுவரா மு.க. ஸ்டாலின்?” என்கிற கேள்வியும் எழுந்து உள்ளது.

தமிழகத்தில், திமுக - பாஜக மோதல் அதிகரிக்கும்பட்சத்தில், அது திமுகவின் நேரடி எதிரியான அதிமுகவுக்கு அரசியல் லாபத்தை தரும்.

அத்துடன், தமிழகத்தில் வெறும் 3 சதவீத வாக்குகளை மட்டுமே கொண்ட பாஜகவை எதிர்க்க வேண்டிய எந்த தேவையும் மு.க. ஸ்டாலினுக்கு இல்லை என்கிற போது, தேவையற்ற இடர்பாடுகளையும், நெருக்கடிகளையும் தவிர்க்க வேண்டிய எதார்த்தமான முடிவை மு.க. ஸ்டாலின் எடுப்பார்” என்றே கூறப்படுகிறது.

இதனால், ஆளுநர் விவகாரத்தில் முதலமைச்சரின் மு.க. ஸ்டாலினின் முடிவு சுமூகமா? - மோதலா? என்பது தெரியாமல் இருக்கிறது. தமிழக அரசின் அடுத்தடுத்த முடிவுகளில் தமிழக ஆளுநரின் முடிவுகள் என்ன? தமிழக அரசின் நிலை என்ன? என்பது தெரியவந்துவிடும்.