500 முன்னணி தனியார் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள 74 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்காக வண்டலூரில் நடந்த வேலைவாய்ப்பு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மூலம் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, இம்முகாமில் வேலைவாய்ப்பை பெற்ற இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிலையில் இந்த முகாமில் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் பிற மாவட்ட இளைஞர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். இம்முகாமில் 500-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்றன. இந்நிறுவனங்களால் 73,950 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், முதல் 20 பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
மேலும் இம்முகாம், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் ஒருங்கிணைப்புடன் உணவு, குடிநீர், சுகாதாரம், பாதுகாப்பு வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகளுடன் நடத்தப்பட்டது. அத்துடன் மகளிர் திட்டத்தின் கீழ் சுயஉதவி குழு அரங்கும் அமைக்கப்பட்டிருந்தது.
அதனைத்தொடர்ந்து, திறன் பயிற்சி மேற்கொள்வதற்கான பதிவுகள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வாயிலாகவும், அயல்நாட்டு வேலைக்கான பதிவுகள் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வாயிலாகவும், தொழிற் பழகுனர் பயிற்சிக்காக பதிவு செய்வதற்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் பயிற்சி பிரிவின் வாயிலாகவும் மேற்கொள்வதற்கு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
தொழில் நெறி வழிகாட்டல் வழங்குவதற்கென மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தினால் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் இதுவரை 36 பெரிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களும், 297 சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. இதில் 5,708 நிறுவனங்களும், 2 லட்சத்து 50 ஆயிரத்து 516 வேலைதேடுபவர்களும் பங்கேற்றதில் 41,213 பேர் பல்வேறு துறைகளில் பணிநியமனம் பெற்றுள்ளனர். இதில் 517 மாற்றுதிறனாளிகளும் அடங்குவர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா மேடையில், கல்வி தொலைக்காட்சி வாயிலாக, அரசு பணிகளுக்காக பல்வேறு தேர்வு முகமைகளால் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு தேவையான பயிற்சிக்கான ஒளிபரப்பை தொடங்கி வைத்தார். இப்பயிற்சி வகுப்பு அன்றாடம் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், அதன் மறு ஒளிபரப்பு இரவு 7 மணி முதல் 9 மணி வரையும் ஒளிபரப்பப்படும்.
இந்நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன், ஜி.செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா, எஸ்.அரவிந்த் ரமேஷ், எஸ்.எஸ்.பாலாஜி, இ.கருணாநிதி, எழிலரசன், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் செயலாளர் ஆர்.கிர்லோஷ் குமார், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குனர் கொ.வீரராகவராவ், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.