நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா தனது பெற்றோருக்கு உருக்கமாகக் கடிதம் எழுதிவிட்டு, ஆடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளது தற்போது வெளியாகி உள்ளன.
நீட் தேர்வை வைத்து, தமிழகத்தின் அரசியல் கட்சிகள் தங்களின் சுய லாபத்திற்காக அரசியல் செய்து கொண்டிருந்தாலும், “நீட் தேர்வால் மேலும் ஒரு உயிரைப் பழி கொடுத்து விட்டது தமிழகம்” என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்தவர் முருக சுந்தரம் என்பவர் காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் 19 வயதான ஜோதிஸ்ரீ துர்கா தான், நீட் தேர்வுக்குத் தன்னை தயார்ப்படுத்தி வந்திருக்கிறார். நீட் தேர்வுக்காகத் தொடர்ந்து படித்துக்கொண்டு வந்த மாணவி ஜோதிஸ்ரீ, கடந்த சில நாட்களாகவே கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக, வரும் 13 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், “நாம் தேர்வில் வெற்றி பெறுவோமா? என்கிற பயம் அதிகமாகவே, மாணவி ஜோதிஸ்ரீக்கு ஏற்பட்டு உள்ளது. நீட் தேர்வு நெருங்க நெருங்க மாணவி ஜோதி ஸ்ரீ துர்காவுக்கு இப்படியாக பயம் அதிகமாகவே, இன்று அதிகாலை நேரத்தில் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த மாணவி ஜோதிஸ்ரீயின் பெற்றோர் மகளின் உடலைப் பார்த்துக் கதறி அழுதனர். இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது குறித்து விரைந்து வந்த ரிசர்வ் லைன் போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணையின் போது, மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக கைப்பட எழுதிய கடிதம் மற்றும், அவர் பேசிய ஆடியோ ஒன்றும் தற்போது வெளியாகி உள்ளது.
அந்த ஆடியோவில் பேசி உள்ள மாணவி, “தற்கொலை முடிவை நானாகவே எடுத்ததாகவும், இதற்காக நான் யாரையும் குறை கூற விரும்பவில்லை” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.
அத்துடன், “ நீட் தேர்வில் ஒருவேளை நான் தோல்வி அடைந்து எனக்கு மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைக்காமல் போய் விட்டால் என்ன செய்வது? என்ற பயம் காரணமாகவே இந்த முடிவை நான் எடுத்ததாகவும்” ஜோதிஸ்ரீ தெரிவித்து இருக்கிறார்.
அதில், “எனது தம்பியை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்றும், இந்த முடிவை நான் எடுத்ததற்காகத் தனது தாய், தந்தையிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றும், அந்த ஆடியோவில் மாணவி ஜோதிஸ்ரீ உருக்கமாக பேசி உள்ளார்.
மகள் தற்கொலை செய்துகொண்டது குறித்துப் பேசிய மாணவி ஜோதிஸ்ரீயின் தந்தை முருக சுந்தரம், “நீட் தேர்வு எழுத இருந்த தனது மகள் ஜோதிஸ்ரீ, மன அழுத்தத்தில் இருந்தார். ஆனால், அவர் தற்கொலை செய்துகொள்வார் என்று நாங்கள் யாரும் யோசித்துக்கூடப் பார்க்கவில்லை” என்று, தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நீட் தேர்வு அச்சம் காரணமாகக் கடந்த சில தினங்களுக்கு முன், அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.