வேன் பிரச்சாரம் ஒன்றில் இருக்கும் உதயநிதி ஸ்டாலின் கூடியிருக்கும் மக்களிடம் "எவ்வளவு நேரமாக வெயிலில் இருக்கிறீர்கள்?” மக்கள் மூன்றரை மணியில் இருந்து என்கிறார்கள். நான்கரை மணிக்கு பிரச்சாரம் என்று அறிவித்தால் 5:00 மணிக்கு தான் வருவேன் என்று உங்களுக்கு தெரியாதா? அப்புறம் ஏன் இவ்வளவு முன்பே வருகிறீர்கள் என கேட்கிறார். இது ஒரு வழக்கமான வாசகமாக தெரியலாம். ஆனால் வெயிலில் நிற்கும் மக்களும் தொண்டர்களும் அவர் தமது சிரமம் குறித்து கரிசனம் காட்டுவதாக உணர்வார்கள்.
எடப்பாடி தொகுதியில் பேசும்போது "போனவாட்டி தெருத்தெருவா பிரச்சாரம் பண்ணின எங்களுக்கு நாமத்தை போட்டுட்டீங்க" என அவர்கள் வாக்களிக்காததை கூட கொஞ்சமும் கோபத்தை காட்டாமல் மிக இலகுவான நடையில் சுட்டிக்காட்டுகிறார். நீட் அனிதா விஷயத்தில் அவர் காட்டிய கோபம் ஒரு சாமானியன் வெளிப்படுத்தும் மிக இயல்பான கோபம். அடுத்ததாக தலைமை ஏற்க இருக்கும் (அல்லது முன்பே ஏற்றுக்கொண்ட) ஏனைய இரண்டாம் தலைமுறை தலைவர்களுடன் ஒப்பிடும்போது உதயநிதி வெளிப்படுத்தும் இந்த தோழமை மிக்க உரையாடல்கள் இந்திய அரசியலில் புதிதானது.
தேசிய அளவில் ராகுல் காந்தி நடத்தும் கூட்டங்களும் மக்களை சந்திக்க அவர் எடுத்துக் கொள்ளும் மற்ற முயற்சிகளும் இன்னொரு வகையில் புதிய முன்முயற்சியாக இருக்கின்றன. தெற்கிலிருந்து வடக்காக இந்தியா முழுக்க அவர் மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்திரை அனைத்து தரப்பு மக்களும் அவரை அறிந்து கொள்வதற்கான ஒரு முயற்சியாகவும் ராகுல் மக்களை அறிந்து கொள்வதற்கான முயற்சியாகவும் அமைந்தது. அந்த வழி நெடுக மக்கள் அவரை அணுகிய விதம் கொஞ்சமும் பாசாங்கு இல்லாததாக இருந்தது. இத்தகைய அனுபவம் யார் ஒருவரையும் இன்னும் பக்குவப்படுத்தும். அதைவிட முக்கியம் பக்குவப்பட்ட ஒரு மனிதனாலேயே இத்தனை பெரிய எண்ணிக்கையிலான மக்களை நேரில் சந்திக்கும் முயற்சியை எடுக்க வைக்கும்.
பாரத் ஜோடோ யாத்திரை எனும் ஒரு அம்சத்தை மட்டும் வைத்து அல்ல. தொடர்ச்சியாக அவர் சாதாரண மக்களோடு கலந்து பேசுவதற்கு எடுக்கும் முயற்சிகள் இந்திய அரசியலில் அசாத்தியமானவை. தன் குழந்தைகளுக்கு உணவிட போதுமான வருமானம் இல்லை என கண்கலங்கிய டெல்லி வியாபாரி ஒருவரை மறுநாள் சந்தித்து பேசுகிறார். லாரி ஓட்டுனர்களோடு பயணிக்கிறார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்ட பெண்ணின் பெற்றோர்களை போலீஸ் கெடுபிடிகளை தாண்டி சந்திக்கப் போகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது அங்கே மயங்கி விழுந்த ஒரு நிருபரின் ஷூக்களை பிரியங்கா காந்தி தன் கைகளால் எடுத்து வந்த காட்சி சிலருக்கு நினைவிருக்கக்கூடும்.
புதிதாக இந்த தகவல்களை வாசிப்பவர்களுக்கு இது ஏதோ தேர்தல் ஸ்டண்ட் போல தோன்றலாம். ஆனால் உதயநிதி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் அல்லாத காலங்களிலும் இதே போன்ற தோழமை உணர்வை வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பதை தொடர்ச்சியாக கவனிப்பவர்களால் புரிந்து கொள்ள முடியும். அல்லது வேறொரு ஒப்பீட்டின் வழியே நாம் இதனை உணரவும் வாய்ப்பு இருக்கிறது. மோடி சில துப்புரவு பணியாளர்களின் கால்களை கழுவி நன்றி செலுத்தும் காட்சிகளையும் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் சம்பவங்களின் காட்சி துணுக்குகளையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் எந்த ஒரு சாதாரண மனிதனாலும் எது நிஜமானது எது ஸ்டண்ட் என்பதை பிரித்து அறியலாம்.
இந்த விஷயங்களை நாம் ஏன் குறிப்பிட்டு பேச வேண்டி இருக்கிறது என்றால் இந்த சமூக ஊடக காலத்தில் அடாவடியாக பேசுவதும் பேசுகிற பொய்கள் குறித்து எந்த குற்ற உணர்வும் இல்லாமல் இருப்பதும் தம் அரசியல் தகுதி போல நடந்து கொள்ளும் தலைவர்கள் உருவாகிறார்கள். அதில் யார் சிறப்பானவர்கள் என போட்டி ஏற்படும் சூழலை தவிர்க்க இளம் தலைவர்களிடையே காணப்படும் இத்தகைய மெல்லுணர்வுகளை கவனித்து ஊக்குவிப்பது அரசியல் சூழலை ஓரளவிற்கு உருப்படியாக வைத்திருக்க உதவும். அந்த வகையில் ராகுல் காந்தியும் உதயநிதியும் நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய அரசியல்வாதிகள்.