தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரே நாளில் 10 வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் இன்று பிரதமர் மோடியின் தமிழக வருகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் எஸ்.பி.வேலுமணி, சபாநாயகர் தனபாலன், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், வானதி சீனிவாசன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இந்த பொதுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, "வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் நம்முடைய கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் வெற்றிபெற்று வாகை சூடுவார்கள்" என்றார். மேலும் பேசிய அவர், "உள்கட்டமைப்பில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்க உதவிய மோடிக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் வளர்ச்சியடைந்துவருகிறது. தமிழ்நாட்டில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டுவருவதால் தொழில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் முன்வருகின்றனர். திருப்பூர் மாநகராட்சிக்கு 950 கோடி ரூபாயிலே ஸ்மார்ட் சிட்டி திட்டம் நிறைவேற்றப்பட்டுவருகிறது. திருமண உதவித்திட்டத்தின் கீழ் 12,51,000 பேர் பயனடைந்துள்ளனர். 52 லட்சம் பேருக்கு மடிக்கணி வழங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்