“கோடநாடு விவகாரம் சாதாரணமான விஷயமல்ல; கோடநாடு வழக்கை விசாரிக்கக் கூடாது என ஏன் நீதிமன்றம் சென்றீர்கள்” என்று, எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சரமாரியாகக் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக அரசியலில் கொடநாடு கொலை விவகாரம், மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக, சட்டசபையில் விவாதிக்க திமுக சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்த நிலையில், அதன் பின்னர் காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அத்துடன், கோடநாடு கொலை - கொள்ளை சம்பவம் தொடர்பாக பல்வேறு முக்கிய கேள்விகளை எழுப்பப்பட்டது.

அதாவது, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே இருக்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு மர்ம கும்பல் புகுந்து, அங்குள்ள காவலாளியான ஓம்பகதூரை கொலை செய்து விட்டு, அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த வழக்கு விசாரணை ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வழக்கு விசாரணை சூடு பிடித்துள்ளது. வழக்கின் முக்கிய குற்றவாளியாகப் பார்க்கப்படும் சயான் காவல் துறை விசாரணையின் போது, எடப்பாடி பழனிசாமி பெயரைக் கூறியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கை விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் முக்கியப் புள்ளிகள் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழக அரசியலைப் பரபரப்பை கிளப்பும் இந்த வழக்கில், இன்றைய தினம் நடைபெற்று வரும் தமிழக சட்டப் பேரவையில் கொடநாடு கொலை வழக்கு சூடுபிடித்தது.

அப்போது, அவையில் பேசிய திமுக எம்.எல்.ஏ சுதர்சனம், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் நீங்கவில்லை என்றும், கொடநாடு கொலை வழக்கு மக்களை பெரும் குழப்பத்துக்கு ஆளாக்கியுள்ளது” என்றும், குற்றம்சாட்டினார்.

அப்போது, குறுக்கிட்டு எழுந்து பேசிய எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “நீதிமன்றத்தில் அது தொடர்பாக வழக்கு உள்ளதால், பேரவையில் பேசுவது முறையல்ல” என்று, பேசினார்.

அத்துடன், “ஜெயலலிதாவின் மரணம் குறித்த கருத்துக்களை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்றும், அவர் அப்போது வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், “ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்றே உறுப்பினர் பேசினார் என்றும், வழக்கின் உள்ளே செல்லவில்லை என்றும், அதனால் அவைக் குறிப்பில் இருந்து நீக்க தேவையில்லை” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், “கோடநாடு விவகாரம் சாதாரணமான விஷயமல்ல; கோடநாடு வழக்கை விசாரிக்கக் கூடாது என ஏன் நீதிமன்றம் சென்றீர்கள்?” என்றும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்குயைப் பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதில் அளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “புலன் விசாரணை வேண்டாம் என நாங்கள் கூறவில்லை, வழக்கை நடத்துங்கள்” என்றும், சற்று கடுப்பாக அவர் பதில் அளித்தார்.

பின்னர், “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அங்கு ஏன் பாதுகாப்பு போடவில்லை? நீங்கள் முதலமைச்சராக இருந்த 4 ஆண்டுகளில் கோடநாடு விவகாரத்தில் எடுத்த நடவடிக்கைகள் என்ன?” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

“கொடநாடு எஸ்டேட் தனியார் சொத்து என்றும், அதன் உரிமையாளர் உறந்துவிட்டதால், அங்கு பாதுகாப்பு போடவில்லை” என்றும், எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

அதன் தொடர்ச்சியாக, “கொடநாடு எஸ்டேட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்கள் அகற்றப்பட்டது தெரியாதா?” என்றும், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

இப்படியாக, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.