“கடவுளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்” என்று, பாஜக தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
தற்போது, தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா 2 வது அலை வீசிச் சென்ற நிலையில், அது தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற விநாயகர் சதுர்த்தி திருவிழா, செப்டம்பர் 10 ஆம் தேதி கொண்டாடப்பட இருப்பதால், சாலைகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட பொது மக்கள் மற்றும் சாதி, மத ரீதியிலான அமைப்பினர் தயாராகி வருகிறார்கள்.
ஆனால், “தமிழகத்தில் சாலைகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும்” மத்திய அரசின் கட்டுப்பாடுகளை மேற்கொள் காட்டி, தமிழக அரசு இந்த முறை தடை விதித்திருக்கிறது.
அதன் காரணமாக, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள், தமிழகத்தில் பெரிதும் அரசியல் ஆக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்றைய தினம் சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் உள்ள பழனி ஆண்டவர் கோயில் மற்றும் வேதபுரீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “பொது மக்கள் அனைவரும் தங்களது வீட்டில் இருந்தே விநாயகரை வழிபட்டால், அவர்களின் கோரிக்கையை விநாயகர் கட்டாயம் ஏற்றுக்கொள்வார்” என்று, குறிப்பிட்டார்.
அத்துடன், “அரசியல் நடத்துவதற்குப் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன என்றும், ஆனால் கடவுளை வைத்து யாரும் அரசியல் நடத்த வேண்டாம் என்று அண்ணாமலைக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்” என்றும், அவர் வெளிப்படையாகவே கூறினார்.
மேலும், “அண்ணாமலையும் சாமியின் திருப்பெயரைக் கொண்டிருக்கிறார் என்றும், இறைவனை முன்னிறுத்தி அரசியல் செய்து, அதன் வாயிலாகத் தேவையில்லாத சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை உருவாக்குவது, ஒன்றாக வாழுகின்ற மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும்” என்றும், அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.
“கடவுள் விசயத்தில், இது போன்ற இனி அரசியலைக் கொண்டுவர வேண்டாம் என்று மீண்டும் ஒரு முறை கேட்டுக்கொள்கிறேன்” என்றும், அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
குறிப்பாக, “யாரையும் வழிபட வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை என்றும், எல்லோரும் அவர்களின் வீட்டில் இருந்தே சிறப்பாக வழிபடலாம் என்றும், விநாயகர் வேண்டிய கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவார்” என்றும், அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இதனிடையே, “வடிவேலு இல்லாத நாட்களில் நமக்கு பொழுதுபோக்கு அண்ணாமலை மட்டும் தான்” என்று, விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.