இந்தியாவில் நாடு முழுவதும கொரோனா தொற்று பாதிப்பு 50 லட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், மாநிலம் முழுவதும் தொற்று பரவலைத் தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்து. இதற்கிடையில், ஐந்து மாதங்களுக்கு பின்னர் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை கூட்டம் மூன்று நாட்கள் கலைவானர் அரங்கில் போதிய சுகாதார முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் நடக்க திட்டமிடப்பட்டிருந்தது.
வழக்கமான பேரவை அரங்கில் சமூக இடைவெளியுடன் கூட்டம் நடத்துவது சாத்தியம் இல்லை என்பதால், வேறு இடத்தில் நடத்துவது குறித்து ஆலோசனை செய்த சபாநாயகர், கலைவாணர் அரங்கில் கூட்டம் நடத்தலாம் என முன்னதாக முடிவு செய்திருந்தார்.
அதன்படி இன்று காலை சட்டப்பேரவையின் 3 நாள் கூட்டத்தொடர் தொடங்கியது. பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ள முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் அனைவருக்கும் ஏற்கெனவே கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர, பேரவைக் கூட்டம் நடை பெறும் 3-வது தளத்துக்குச் செல்லும் அலுவலர்கள், ஊழியர்கள், செய்தியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, பிரத்யேக அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காலை 9 மணிமுதல் திமுக, அதிமுக, காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டப்பேரவைக் கூட்டத்துக்கு வந்தனர். அதில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நீட்டைத் தடை செய், Ban NEET , என்கிற வாசகத்துடன் அடங்கிய முகக்கவசத்தை அணிந்து வந்தனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தனி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன.
இந்தக் கூட்டத்தின் தொடக்கமாக, கொரோனா தொற்றால் உயிரிழந்த முன்னாள் குடியரசு தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் என அனைவருக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் சட்டப்பேரவை நாளை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை நாளை ஒத்தி வைக்கப்படுகின்றது.
சட்டப்பேரவை முடித்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தில் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துக்கொண்ட மாணவர்களையும் இணைத்து அவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்க வேண்டும் என கூறியதாகவும் ஆனால் சபாநாயகர் தனது கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்
செய்தியாளர்களை சந்தித்த போது பேசிய மு.க.ஸ்டாலின், "மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தோம். அதை அவர் ஏற்காதது கண்டிக்கத்தக்கது
இரண்டு நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடத்துவது போதாது என்று ஏற்கனவே தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் கோரிக்கை வைத்திருந்தார். அதை சபாநாயகர் ஏற்கவில்லை. இரண்டு நாட்களில் பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப போதாது" எனவும் குறிப்பிட்டார்.
நீட் பிரச்சனை குறித்தும், புதிய கல்விக்கொள்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் எழுப்ப உள்ளோம்" என்றார்.
ஆளும் கட்சியினர் நீட் தேர்வில் நாடகம் நடத்தி வருவதாகவும், இதுவரை நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசை, வலியுறுத்தவில்லை என்றும், போதுமான அழுத்தம் தரவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் தரப்பில், சட்டப்பேரவை கூட்டத்தொடரை கூடுதல் நாட்கள் நடத்த வேண்டும் என்று எம்.எல்.ஏ. விஜயதாரணி கோரிக்கை வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.