சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. முப்பெரும் விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள், முன்னணி நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் இந்த உறுப்பினர் சேர்க்கையை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

“எல்லோரும் நம்முடன்” என்ற பெயரில் இந்த ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையை தி.மு.க. அறிமுகப்படுத்தி உள்ளது. அடுத்த 45 நாட்களில் குறைந்தது 25 லட்சம் புதிய ஆன்லைன் உறுப்பினர்களை சேர்க்க திட்டமிடப்பட்டது. இதற்காக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் உள்ள மக்களை இப்பணிக்காக சந்திக்கிறார்கள்.

இந்தப் பணி வேகமாக நடைபெற்று வரும் நிலையில், திமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு அவர்கள், திமுக., வின் ஆன்-லைன் உறுப்பினர் சேர்க்கை திட்டமான "எல்லோரும் நம்முடன்" குறித்த அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது :

``கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலும், தளர்வுகளுடன் பொது முடக்க நேரத்திலும், இந்தியாவே ஸ்தம்பித்துப் போயிருந்த வேளையில், நவீன தொழில் நுட்ப உதவியோடு காணொலிக் காட்சி வாயிலாக ஒவ்வொரு நாளும் கழகத் தோழர்கள் , நிர்வாகிகள் என்ற அளவில் மட்டுமல்லாமல்; சமூகத்தில் எல்லாத் தரப்பிலும் இருக்கின்றன ஆயிரக்கணக்கான மக்களிடத்திலும் கலந்துரையாடி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற எழுபதாண்டு இயக்கத்தை உயிர்ப்போடு வைத்திருக்கும் பெருமை கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமே உண்டு.

அதன் ஒரு முக்கிய மைல்கல் தான் அண்மையில் இணைய வாயிலாக நடைபெற்ற கழகப் பொதுக்குழு. ஏறத்தாழ 3800 பேர் இடம் பெற்ற அந்தப் பொதுக்குழுவைக் காணொலி வாயிலாக வெற்றிகரமாக நடத்தி, உலக அளவில் இவ்வாறு காணொலி வாயிலாக நடத்தப்பட்ட மிகப் பெரிய கூட்டங்களில் கழகப் பொதுக்குழு இரண்டாவது இடத்தைப் பெற்றது என்ற வரலாற்றுச் சிறப்பை உருவாக்கித் தந்தவர் கழகத் தலைவர் ஆவார்கள்.

அதனைத் தொடர்ந்து, இன்றைய வளர்ந்த தொழில் நுட்ப வசதிகளின் துணைக்கொ ண்டு கழகத்தின் வளர்ச்சிக்கு “ எல்லோரும் நம்முடன்” என்ற மகத்தான திட்டத்தின் வாயிலாக மின்ணனு முறையில் உலகெங்கும் இருப்போர் எவ்வித சிரமமுமின்றி இருந்த இடத்தில் இருந்தவாறே தங்களைக் கழக உறுப்பினராக இணைத்துக் கொண்டு கழக உறுப்பினர் அட்டையையும் உடனே தரவிறக்கம் செய்துகொள்ளக்கூடிய சிறப்பான திட்டத்தினை கடந்த செப்டம்பர் 15 ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கழக விழாவில் கழகத்தலைவர் தொடங்கி வைத்தார்கள்.

இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட இரண்டே தினங்களிலேயே ஆயிரக்கணக்கில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டது,
உலகெங்கும் உள்ளோரிடம் இத்திட்டம் பெற்றிருக்கும் வரவேற்பிற்கும்; அதன் வெற்றிக்கும்; கழகத்தலைவரின் தொலைநோக்குச் சிந்தனைக்கும் கட்டியம் கூறுவதாக அமைந்து இருக்கின்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கான சிறப்பு முகாம்களை அமைத்து “ எல்லோரும் நம்முடன்” திட்டத்தின் கீழ் கழக உறுப்பினர்களைப் பல்லாயிரக்கணக்கில் சேர்க்க வேண்டும் என்ற ஆர்வமும் இன்றைக்குக் கழகத் தோழர்களிடம் ஏற்பட்டுள்ளது.

தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பின்னால் அணிவகுக்க விரும்பிக் காத்திருக்கும் ஆர்வலர்களுக்கு இத்திட்டம் ஒரு நல்வாய்ப்பாகும். எவ்விதத் தடையும், பாகுபாடும் இன்றி எல்லோரும் கழகத்தலைவரோடு இணைந்து பயணிக்க ஒரு மாபெரும் வாய்ப்பை “ எல்லோரும் நம்முடன் “ திட்டம் உருவாக்கியுள்ளது.

கழகத்தில் தங்களை இணைத்துத் தினமும் பல்லாயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாக பெருகி வருவது கழகத்தலைவருக்கு பக்க பலமாக அமைந்திருக்கின்றது"

என்று கூறியுள்ளார் அவர்.