சென்னையில் துப்பாக்கிச் சூட்டில் முடிந்த குடும்ப தகராறு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருப்பத்தூரில் தி.மு.க கிளை செயலாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு உள்ள சம்பவம் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்த 57 வயதான சையத் இப்ராஹீம், ராயபுரம் மேம்பாலம் அருகேயுள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர், சென்னை பாரிமுனையில் உணவகம் நடத்தி வருகிறார். இவருக்கு 3 பிள்ளைகள் உள்ள நிலையில், அனைவருக்கும் திருமணம் முடித்து வைத்து உள்ளார்.
இதனிடையே, சையத் இப்ராஹீமுக்கும், அவரது மனைவி நிசாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக, கடந்த ஒரு வருட காலமாகவே கணவன் - மனைவி இருவருக்கும் இடையில் பேச்சு வார்த்தை இல்லாமல், தனித்தனியே ஒரே வீட்டிற்குள் சமைத்து, சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளனர்.
இதனையடுத்து, நிஷாவிற்கு அவரது சகோதரியின் மகன் அசாருதீன், மருத்துவ தேவைகள் உள்ளிட்ட உதவிகளைச் செய்து வந்து உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கணவன் இப்ராகிம், நேற்று இரவு அசாருசீனிடம் தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டு உள்ளது. இதில், கடும் ஆத்திரமடைந்த இப்ராகிம், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து. அசாரூதினை சுட்டுள்ளார். இதில், அசாருதின் கையில் பலத்த காயம் ஏற்பட்டு அலறித்துடித்து உள்ளார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து, அவரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.
மேலும், இது குறித்து தகவலறிந்து வந்த ராயபுரம் போலீசார், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அசாருதினிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், சென்னை ராயபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதே போல், திருப்பத்தூர் அருகே தி.மு.க கிளை செயலாளரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட போது, அவர் சட்டைப் பையில் வைத்திருந்த செல்போன் அவரின் உயிரைக் காப்பாற்றி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்து உள்ள நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த 50 வயதான வேலாயுதம், அப்பகுதி தி.மு.க. கிளை செயலாளராக உள்ளார். இவருக்குத் தாமரைச் செல்வி என்ற மனைவியும், 21 வயதில் குணசேகரன், 18 வயதில் ஞானசேகரன் ஆகிய இரு மகன்களும் உள்ளனர். இரு மகன்களும் பெங்களூருவில் வேலை செய்து வருவதால், வேலாயுதமும் தாமரை செல்வி மட்டுமே தன் கிராமத்து வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் வேலாயுதம் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு இருந்தார். இதனால், அப்பகுதியைச் சேர்ந்த பிரகாசம் என்பவருக்கும் வேலாயுதத்திற்கு இடையே அது முதல் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதமாக மாறியது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், நேற்றைய தினம் இரவு சுமார் 8 மணியளவில் வேலாயுதம் வெளியே சென்று வீட்டிற்குள் நுழைந்து உள்ளார். அப்போது, 2 மர்ம நபர்கள் நாட்டுத் துப்பாக்கியால் அவரை சுட்டு உள்ளனர். ஆனால், அங்கு இருட்டாக இருந்ததால், சத்தம் கேட்டுத் திரும்பிய வேலாயுதத்தின் கழுத்து மற்றும் வயிறு பகுதியில் ஒவ்வொரு குண்டுகள் பாய்ந்து உள்ளன.
குறிப்பாக, அவரின் மார்பை நோக்கி வந்த 2 குண்டுகள், அவருடைய சட்டைப் பாக்கெட்டில் இருந்த செல்போனில் பட்டதால், குண்டானது அவரின் மார்பு பகுதியைத் தாக்காமல் இருந்துள்ளது. இதனையடுத்து, மர்ம நபர்கள் தப்பிச் செல்லவே, ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த வேலாயுதத்தை அவரது மனைவி வாணியம்பாடியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். அதன் பிறகு, உயர் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அத்துடன், இது தொடர்பாக மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார், அவரிடம் வாக்கு மூலம் பெற்று வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் இருவரையும் தீவிரமாகத் தேடி வந்தனர். இதனையடுத்து, அந்த 2 பேரையும் பிடித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருவதால், பலரும் பீதியடைந்து உள்ளார்.