அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சிறுவனை அழைத்து தன் செருப்பை கழட்ட சொன்ன விவகாரம் பெரும் சர்சையை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமை தொடங்கி வைக்க சென்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், விழாவை தொடங்கி வைத்துவிட்டு, அங்கே நடந்து சென்றார்.
அப்போது, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செருப்பு, அங்குள்ள புல் தரையில் மாட்டிக் கொண்டது.
இதனால், அங்கு நின்றுகொண்டிருந்த பழங்குடி சிறுவனைப் பார்த்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “டேய் வாடா, செருப்ப கழட்டுடா” என்று கூறி சிறுவனை அழைத்தார்.
இதனையடுத்து, சிறுவனும் அமைச்சரின் செருப்பை கழற்றி உள்ளார். அப்போது, அதிகாரி ஒருவரும் செருப்பை கழட்ட அமைச்சருக்கு உதவி உள்ளார். இந்த நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யாவும் உடன் இருந்துள்ளார்.
இந்த காட்சி தீயாகப் பரவிய நிலையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு எதிரான கண்டன குரல்கள் எழுந்துள்ளன.
இதனையடுத்து, காலணியைக் கழற்றச் சொன்ன விவகாரத்தில், பெரிய தவறு இல்லை என நினைக்கிறேன் என்று திண்டுக்கல் சீனிவாசன் இயல்பாகக் கூறினார்.
மேலும், என்னுடைய பேரன் போல் நினைத்து தான், தன்னுடைய காலணியைக் கழற்றச் சொன்னேன் என்றும், இதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.
இதனிடையே, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு சிறுவன் செருப்பைக் கழட்டி விடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.