“கங்குலிபோல எனக்கு தோனியும், கோலியும் உறுதுணையாக இல்லை” என்று யுவராஜ்சிங் வேதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 2011 ஆம் அண்டு உலகக் கோப்பை நட்சத்திர வீரராக ஜொலி ஜொலித்தவர் யுவராஜ்சிங். அந்த ஆண்டு உலக கோப்பையில் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்று, உலகையே திரும்பி பார்க்க வைத்தார். அத்துடன், 6 பாலில் 6 சிக்ஸர் அடித்த வரலாற்று சாதனையையும் படைத்தவர் யுவராஜ்சிங்.

இதனிடையே 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்குப் பின், புற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட யுவராஜ்சிங், அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று, உடல் நலம் தேறிய நிலையில், இந்தியா திரும்பினார்.

பின்னர், மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு, மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பினார். அதன் பிறகு அவருக்கு வழங்கப்பட்ட ஒரு சில போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினாலும், அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

இதனையடுத்து, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக யுவராஜ்சிங் அறிவித்தார்.

இந்நிலையில், தனது கிரிக்கெட் வாழ்க்கை பற்றி மனம் திறந்த யுவராஜ்சிங், வெளிப்படையாகவே தோனி மற்றும் விராட் கோலி பற்றியும் பேசியுள்ளார்.

அதன்படி, “கங்குலி தலைமையில் விளையாடியது மறக்க முடியாத அனுபவம் என்றும், அந்த அளவுக்கு அவர் எனக்கு கிரிக்கெட்டில் உறுதுணையாக இருந்தார்” என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு, “கேப்டன் பொறுப்பு தோனியிடம் சென்ற நிலையில், கங்குலியா? தோனியா? யார் சிறந்த கேப்டன்? என்று கேட்டால், அது சொல்வது கடினம். ஆனால், கங்குலி தலைமையில் விளையாடிய நினைவுகளை இன்று வரை என்னால் மறக்க முடியவில்லை” என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய யுவராஜ் சிங், “கங்குலி எனக்கு பக்க பலமாக உறுதுயைாக இருந்தது போல, தோனியும் - விராட் கோலியும் உறுதுணையாக எனக்கு இல்லை” என்றும் கவலைத் தெரிவித்தார்.

அத்துடன், “தோனி - கோலி இவர்கள் இருவரிடமும் சாதகமும், பாதகமும் நிறைய இருக்கிறது என்றும், யுவராஜ் சிங் வெளிப்படையாகவே பேசினார்.

இதனிடையே, தோனி மற்றும் கோலி குறித்து, யுவராஜ்சிங் பேசியது, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.