குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தலைநகர் டெல்லியில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 நாள் பயணமாக இந்தியா வருகை தந்த நிலையில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தலைநகர் டெல்லியில் நேற்று முன் தினம் மீண்டும் போராட்டம் வெடித்தது.

அப்போது, குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாகவும் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இரு பிரிவனர் இடையே பெரும் கலவரம் வெடித்தது.

இரு தரப்பினரும் மாறி மாறி கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். இதனையடுத்து, அங்கு விரைந்து வந்த போலீசார், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டை வீசினார். இதில், வன்முறையாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.
அப்போது, மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், காவலர் ரத்தன்லால் பரிதாபமாக உயிரிழந்தார். இவரைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேலும் 4 பேர் உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். சுமார் 150 பேர் படுகாயம் அடைத்தனர். இதனால், டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து, தலைநகர் டெல்லியில் நேற்று மீண்டும் கலவரம் வெடித்தது. அப்போது, ஒருவரை ஒருவர் கற்களைக் கொண்டு தாக்கிக்கொண்டனர். கடைகள், வாகனங்கள் என கண்ணில் படுபவை எல்லாம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இதன் காரணமாக நேற்று 6 பேர் உயிரிழந்தனர்.

மேலும், படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது.

இதனையடுத்து, டெல்லியில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு, மார்ச் மாதம் 24 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.