ஐஐடி வளாகத்தில் இரண்டு நாட்களில் நான்கு மான்கள் ஆந்த்ராக்ஸ் நோயால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐ.ஐ.டியில் சுமார் 200 ஏக்கருக்கு மேல் பரந்து விரிந்திருக்கும் ஐஐடி வளாகம் வனப்பகுதியில் அமைந்துள்ளது. நூற்றுக்கணக்கான மான்களின் வசிப்பிடமாக சென்னை ஐஐடி வளாகம் இருந்து வருகின்றது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென மான் ஒன்று உயிரிழந்துள்ளது. திடீரென மான் உயிரிழந்ததை தொடர்ந்து இறந்த மானை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அந்த மான் ஆந்த்ராக்ஸ் நோயால் உயிரிழப்பதாக முடிவுகள் வெளிவந்தன. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த இரு தினங்களில் நான்கு மான்கள் உயிரிழக்க நேரிட்டுள்ளது.
மேலும் இதனால், ஆந்த்ராக்ஸ் நோய் பரவல் அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்து இருக்கின்றது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள சென்னை ஐஐடி, இறந்த மான்களை கையாண்ட பணியாளர்களுக்கு நோய் தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது.
அதனைத்தொடர்ந்து நாய், மான் உள்ளிட்ட விலங்குகள் ஐஐடி வளாகத்தில் இருந்து நகர் பகுதிக்கு செல்வதை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை மாநகராட்சி, சுகாதாரத் துறையுடன் இணைந்து நோய்களை கட்டுப்படுத்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஆந்தராக்ஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்க இருப்பதாக விளக்கம் அளித்துள்ளது. தற்போதைய நிலையில் ஆந்த்ராக்ஸ் நோய் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.