டெஸ்ட் கிரிக்கெட்டில் வார்னர் வெறித்தனமான பேட்டிங் செய்து, முச்சதமடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான 2 வது டெஸ்ட் போட்டி, அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, முதலில் பேட்டிங் செய்தது.
முதல் நாள் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 302 ரன்களை குவித்தது. நேற்று ஜோ பர்ன்ஸ் ஆட்டம் இழந்ததையடுத்து, வார்னர் களமிறங்கி அதிரடியாக விளையாடி சதமடித்தார்.
இதனால், முதல் நாள் ஆட்ட முடிவில் வார்னர் 166 ரன்களுடன் களத்திலிருந்தார். இதனையடுத்து, 2 ஆம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய சிறிது நேரத்திலேயே, வார்னர் இரட்டை சதம் அடித்து, ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தினார்.
இதனையடுத்து, இன்னும் அதிரடியாக வார்னர், விளையாடத் தொடங்கினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் குறிப்பிட்ட இடைவெளியில் விழுந்தாலும், மறுமுனையில் நின்று வெறித்தனமாக பேட்டிங் செய்த வார்னர், பாகிஸ்தான் பலர்களின் பந்துகளை எல்லா புறமும் தெறிக்கவிட்டு, முச்சதம் அடித்து சாதனை படைத்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் முச்சதத்தை வார்னர் பதிவு செய்து, தொடர்ந்து 400 ரன்களை அடிக்கும் முனைப்புடன் அதிரடியாக அவர் விளையாடினார். அப்போது, வார்னர் 335 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆஸ்திரேலிய அணி டிக்லர் செய்தது. அப்போது, ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 589 ஆக இருந்தது. இதனையடுத்து, பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்யத் தொடங்கி உள்ளது.
இந்த முச்சதம் மூலம், வார்னர் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளார். அதன்படி, டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த ஏழாவது ஆஸ்திரேலியா வீரர் என்ற பெருமையும், பாகிஸ்தானுக்கு எதிராக முச்சதம் அடித்த 4வது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
மேலும், சர்வதேச அளவில், முச்சதம் அடித்த 16 வது தொடக்க வீரர் என்ற பெருமையையும், அவர் தனதாக்கிக்கொண்டார்.