உலக முழுவதும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 15 லட்சத்தைத் தாண்டிய நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை நெருங்கி வருவது உலக மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை சில நூறாக இருந்த நிலையில், அதன் பாதிப்பு பல மடங்காக அதிகரித்து, உலக மக்களையே கடும் பீதியில் ஆழ்த்தி உள்ளது.

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 4,30,210 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. நேற்று தொடர்ந்து 2 வது நாளாக அமெரிக்காவில் மட்டும் சுமார் 2000 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்தனர். இதனால், அமெரிக்காவில் பலி எண்ணிக்கை தற்போது 14,795 ஆக உயர்ந்துள்ளது. இதனால், அமெரிக்கா மக்கள் அனைவரும் உயிர் பயத்தில் உரைந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா, திக்கித் திணறி வருகிறது.

மேலும், அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை இந்தியா அனுப்புவதற்கு; பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நன்றி கூறியுள்ளார்.

இதற்குப் பதில் அளித்துள்ள பிரதமர் மோடி, கொரோனா என்னும் கொடிய நோயை ஒன்றாகச் சேர்ந்து எதிர்ப்போம் என்று சூளுரைத்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 446 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், ஸ்பெயினில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு 14,792 ஆக அதிகரித்துள்ளது. அந்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை தற்போது 1,48,220 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக இத்தாலியில் 1,39,422 பேரும், ஜெர்மனியில் 1,13,296 பேரும், பிரான்ஸ் நாட்டில் 1,12,950 பேரும், சீனாவில் 81,802 பேரும், ஈரான் நாட்டில் 64,586 பேரும், இங்கிலாந்தில் 60,733 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலை சீராக உள்ளது என்றும், அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார் என்றும் இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

ஒட்டுமொத்தமாக உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்தைத் தாண்டி, 90 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அதேபோல், உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 15 லட்சத்தைத் தாண்டிய நிலையில், தற்போது 15,29,194 ஆக அதிகரித்துள்ளது. இதனால், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் உலக மக்கள் அனைவரும் உயிர் பயத்தில், அப்படியே உரைந்துபோய் உள்ளனர்.

அதே நேரத்தில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தோரின் எண்ணிக்கை இதுவரை 3,37,133 பேர் வீடு திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.