உலக அளவில் கொரோனாவிற்கு 16500 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், மனித குலத்துக்கு மாபெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
சீனாவில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தோன்றிய இந்த கொரோனா வைரஸ், ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் வேகமாகப் பரவி வருகிறது. ஆனாலும், இந்த கொரோனா வைரசை அழிக்கவோ, தடுக்கவோ உலக நாடுகளால் முடியவில்லை.
குறிப்பாக, இந்த கொரோனாவுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாததால், கொரோனா வைரசால் இதுவரை பல லட்சம் பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முக்கியமாக, இந்த கொரோனா பரவலின் தீவிரத்தைத் தடுக்க முடியாமல், உலக அளவில் இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவின் கோராத்தாண்டவத்தால் உலக அளவில் இதுவரை 16 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதிலும் குறிப்பாக, இந்த கொரோனா தாக்குதலுக்கு ஐரோப்பாவைச் சேர்ந்தவர்களே அதிகம் பேர் உயிரிழந்து வருகின்றனர். இந்த மொத்த எண்ணிக்கையில் 9 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
அதிகபட்சமாக இத்தாலியில் மட்டும் 6 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு 60 பேர் இது வரை உயிரிழந்துள்ளனர். நியூசிலாந்தில் கொரோனா தாக்கியவர்களின் எண்ணிக்கை தற்போது 100 யை கடந்துள்ளது. இஸ்ரேல் நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ளது. அங்கு நேற்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அந்நாட்டில் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து 270 ஆக தற்போது உயர்ந்துள்ளது. அத்துடன். சீனாவில் புதிதாக யாருக்கும் கோரோனா தொற்று இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.