கொரோனா பாதிப்பால் நுங்கம்பாக்கம் காவல்நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 1,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் பழனிசாமி, ஆலோசனை மேற்கொள்கிறார். இதில், மே 3 ஆம் தேதிக்குப் பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து, ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், ஊரடங்கைக் கடுமையாக்குவதா? அல்லது தளர்த்துவதா? என்பது குறித்தும் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

அதேபோல், ஆன்லைனில் சட்டக்கல்லூரி பாடத்திட்டங்கள் நடத்தத் தமிழக சட்டத்துறை முடிவு செய்துள்ளது. கூகுள் கிளாஸ் ரூம், ஜூம், வாட்ஸ் அப் ஆகிய செயலிகள் மூலம் இந்தாண்டிற்கான பாடத்திட்டங்களைக் கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தைச் சேர்ந்த 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நுங்கம்பாக்கம் காவல்நிலையம் மூடப்பட்டு, கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும், குறிப்பிட்ட அந்த 2 காவலர்களுடன் தொடர்பிலிருந்த அனைவரும் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.



சென்னை மத்திய ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையத்தில் முன்னேற்பாடு நடவடிக்கையாக, ரயில்கள் இயக்கப்பட்டால் தனிநபர் இடைவெளியைப் பின்பற்றும் விதமாக, 6 அடிக்கு ஒரு கோடு வரையப்பட்டு வருகிறது.

சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் இன்று 3 வது நாள், முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா அதிகம் பாதித்த 3 மாநகராட்சிகளில் நேற்று முன் தினம் முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சென்னை, கோவை, மதுரையில் இன்று 3 வது நாள் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பாதித்த மேலும் 2 மாநகராட்சிகளில் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீடிக்கிறது. சேலம், திருப்பூரில் இன்றுடன் 3 நாட்கள் முழு ஊரடங்கு முடிவடைகிறது.

சென்னை கோயம்பேடு சந்தையில் ஏற்கெனவே 2 வியாபாரிகளுக்கு கொரோனா உறுதியான நிலையில், மேலும் ஒருவருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்றுவரை வியாபாரம் செய்த 55 வயதான பூக்கடைக்காரருக்கு கொரோனா தாக்கி உள்ளது. இதனையடுத்து, அவருடன் தொடர்பிலிருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக ஈரோடு மாறியுள்ளது. அங்குள்ள பெருந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 70 பேரில், 69 பேர் குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 65 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது எஞ்சிய 4 பேரும் குணமடைந்துள்ளனர். குறிப்பாக, ஈரோட்டில் கொரோனாவால் இதுவரை ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார்.

வேலூரில் கொரோனாவுக்கு இன்று 5 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,101 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 81 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

அதேபோல், தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 1,937 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 24 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறியதாக 3,45,357 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், 3,26,645 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2,93,193 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, விதிமுறை மீறியவர்களிடமிருந்து இதுவரை 3.40 கோடி ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.