தமிழ்நாட்டில் கொரோனா உயிரிழப்பு 8 ஆக உயர்ந்துள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ், தமிழகத்தில் தற்போது தான் வீரியம் எடுக்கத் தொடங்கியிருக்கிறது. இதனால், தமிழகத்தில் சமூகத் தொற்று பரவியிருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவைத் தமிழக போலீசார் கடுமையாகப் பின்பற்றத் தொடங்கி உள்ளனர்.
இதனிடையே, வேலூர் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதான வியாபாரி ஒருவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு, அங்குள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார். இதனால், தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 8 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை பெரியமேட்டில் ரகசியமாகத் தங்கியிருந்த 3 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் நேற்று மட்டும் 69 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், தமிழகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா மேலும் பரவாமல் தடுப்பதற்காக 19 சிறப்பு நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணையைத் தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. சென்னை மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ரகுநந்தன் உள்பட 19 பேர், தமிழக அரசின் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
அதேபோல், தமிழகத்தில் பிப்ரவரிக்குள் கட்டி முடிக்க வேண்டிய வீடு, கட்டடங்களை ஜூன் வரை கட்டிக்கொள்ளத் தமிழக அரசு அவகாசம் வழங்கி உள்ளது. ஊரடங்கால் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், தமிழக அரசு தாமாக முன்வந்து இந்த அவகாசம் வழங்கி உள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1,03,833 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றிய 1,13,117 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், தடை மீறியதாக 87,577 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து இதுவரை 32,83,844 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே, நடிகை மனோரமாவின் மகன் பூபதி, உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மது கிடைக்காத விரக்தியில், போதைக்காகத் தூக்க மாத்திரைகளை அதிக அளவில் சாப்பிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.