தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1520 உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் எதிர்பார்த்த அளவை விட, சற்று அதிகரித்து வருகிறது. ஒரு பக்கம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் சற்று அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தமிழக மீனவர்கள், பட்டாசு தொழிலாளர்கள், திருநங்கை, சினிமா ஊழியர்களுக்கு 86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அத்துடன், 10 லட்சம் சிறப்பு மளிகை தொகுப்புகள் தயார் நிலையில் உள்ளதாகவும், தமிழகம் முழுவதும் உள்ள 29,486 நியாய விலை கடைகளில் தொகுப்பு வழங்கப்படுகிறது என்றும் அமைச்சர் செல்லூர்ராஜூ தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனாவில் இருந்து தப்பிக்க, ஊரடங்கில் எத்தனை சிரமங்கள் இருந்தாலும், அதைப் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனிடையே, புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன்முறையாக இளைஞர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அந்த இளைஞருக்கு கொரோனா தொற்று எப்படி வந்தது என்ற குழப்பத்தில் சுகாதாரத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக, சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 303 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 6 பேர், குணமடைந்து இன்று வீடு திரும்பினர்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1520 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை தமிழகம் முழுவதும் 17 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, சுங்கச் சாவடி கட்டண வசூலை நிறுத்தி வைப்பதோடு, கட்டண உயர்வையும் ரத்து செய்யக்கோரி, மத்திய சாலைப்போக்குவரத்துறை அமைச்சருக்கு, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். “சுங்க கட்டண உயர்வால், அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்து, அது பொதுமக்களுக்கும் பெரும் பாரமாக இருக்கும்” என்றும், அவர் கவலைத் தெரிவித்துள்ளார். “இதனால், ஊரடங்கு காலம் முடியும் வரை, சுங்க கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்” என்றும் சு.வெங்கடேசன் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.