தமிழகத்தில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 46 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் புதிய புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது கொரோனா என்னும் கொடிய வைரஸ் தொற்று. இதனால், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இன்று அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ஆரணிக்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது, அவரது கார் ஓட்டுநருக்கு கொரோனா என்று உறுதியான தகவல் வந்ததால், அவர் பாதி வழியில் இறங்கினார். பின்னர், வேறு காரில் சென்றார் அமைச்சர் புறப்பட்டுச் சென்றார்.
தொடர்ந்து, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் தொடர்ந்து 2 வது நாளாக கொரோனா பாதிப்பு தொற்று, 3 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது.
குறிப்பாக, தமிழகத்தில் நேற்று ஒரே மட்டும் அதிக பட்சமாக 3,509 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 70,977 ஆக அதிகரித்தது.
அத்துடன், தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக கொரோனா பாதிப்பு தொற்று எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்து பதிவாகி வந்த நிலையில், நேற்று ஒரே அடியாக 3 ஆயிரத்தைக் கடந்தது. இதில், சென்னையில் மட்டும் நேற்று 1,834 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக, சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 47,650 ஆக அதிகரித்தது. இதனால், பொது மக்கள் கடும் பீதியடைந்தனர்.
சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 191 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 98 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 170 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்தது. இது தவிரத் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் அதிகபட்சமாக நேற்று ராமநாதபுரத்தில் 140 பேருக்கும், மதுரையில் 204 பேருக்கும், வேலூரில் 172 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
மேலும், கொரோனா பாதிப்பால் நேற்று தமிழகத்தில் 45 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 911 ஆக அதிகரித்தது. இதில் சென்னையில் மட்டும் 694 பேர் உயிரிழந்துள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை கூறியிருந்தது.
எனினும், தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 2,236 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீடு திரும்பினர். இதனால், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 39,999 ஆக உயர்ந்தது.
குறிப்பாக, “தமிழகம் முழுவதும் 30,064 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தமிழக சுகாதாரத்துறை நேற்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை தற்போது வெளியிட்டுள்ள கொரோன பாதிப்பு பற்றிய புள்ளி விபரத்தில், “தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில், இன்று ஒரே நாளில் அதிரடியாக 3,645 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி” செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74,622 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு இன்று மட்டும் 46 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றை விட இன்று ஒருவர் கூடுதலாக உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக, தமிழகத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 957 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதேபோல், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,358 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை கூறியுள்ளது.
அத்துடன், கடந்த 17 ஆம் தேதி தமிழகத்தில் 2,174 என்ற எண்ணிக்கையில் இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்ததால், கடந்த 24 ஆம் தேதி 2,866 ஆக அதிகரித்துக் காணப்பட்டது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாகத் தொடர்ந்து கொரோனா தொற்று 3,500 யை தாண்டி காணப்படுவதால், பொது மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,013 ஆக அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 111 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 670 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அந்த மாவட்டத்தில் 352 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.