சீனாவைவிட இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளது, இந்திய மக்களை கடும் பீதியில் ஆழ்த்தி உள்ளது.
இந்தியாவில் கொரோனா என்னும் கொடிய வைரஸ், கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. இதனால், பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டு இதுவரை 3 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், நாளையுடன் அது நிறைவடைகிறது. இதனால், நாளை மறுநாள் முதல் 4 வது முறையாக பொது முடக்கம் நீட்டிக்கப்படுகிறது.
இதனிடையே, கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து பரவியதாகக் கூறப்படும் நிலையில், உலகிலேயே அதிகம் மக்கள் தொகை கொண்ட நாடுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக உள்ள இந்தியாவில், தற்போது கொரோனாவின் தாக்கம் அதி தீவிரமாகப் பரவி வருகிறது.
அதன்படி, இந்தியாவிலேயே அதிகபட்சமாக கொரோனா வைரஸ் தொற்று மகாராஷ்டிரா மாநிலத்திலேயே அதிகம் பரவி உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,100 ஆக உயர்ந்துள்ள நிலையில், அந்த மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,068 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், கொரோனா பாதிப்பில் தமிழகம் தற்போது, மீண்டும் 2 ஆம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. மும்பை திராவியிலிருந்து சிவகங்கை மாவட்டம் வந்த சுமார் 60 பேரில் 10 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. தமிழகத்தில், கொரோனாவல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,108 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் 3 ஆம் இடத்தில் உள்ள குஜராத்தில் இதுவரை 9,932 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு, இதுவரை 606 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல், தலைநகர் டெல்லியில் 9,333 பேர் கொரோனாவல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,970 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது.
இப்படி ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சீனாவை விட தற்போது அதிகரித்துள்ளது. அதன்படி, இந்தியாவில், பாதிப்பு எண்ணிக்கை 86,508 ஆக உயர்ந்துள்ள நிலையில், பலியாகி உள்ளோரின் எண்ணிக்கை 2,760 ஆக அதிரிகத்துள்ளது.
அதேபோல், இந்தியாவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 35.08 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மேலும், இன்று காலை நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 21.34 லட்சம் மாதிரிகளில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.
குறிப்பாக, ஊரடங்கால் இந்தியாவில் 80 சதவீத குடும்பங்கள் வருமானத்தை இழந்து உள்ளன என தற்போது ஆய்வில் தெரியவந்துள்ளது.