இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35,020 ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,159 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவின் கொர தாண்டவம், நாடு முழுவதும் தீவரமாகப் பரவி வருகிறது. இந்த வைரசைக் கட்டுப்படுத்தவும், அவற்றைத் தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
மகாராஷ்டிராவிலிருந்து கோயம்பேடு சந்தைக்குப் பொருட்கள் ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் ஒருவர், தனக்கு கொரோனா இருப்பது தெரியாமல், 2 மணி நேரத்திற்கு மேலாக கோயம்பேடு சந்தையில் சுற்றித்திரிந்துள்ளார். இதனால், அவரிடம் தொடர்பிலிருந்தவர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் கடந்த 12 மணி நேரத்தில் 3 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். புனேயில் மட்டும் இதுவரை உயிரிழப்பு எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 27 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 583 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 10,498 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 1,773 பேர் குணமடைந்த நிலையில், 459 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தபடியாக குஜராத்தில் இதுவரை 4,395 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் இதுவரை கொரோனாவுக்கு 214 பேர் உயிரிழந்துள்ளனர்.
அடுத்தபடியாக டெல்லியில் கொரோனாவுக்க இதுவரை 3,515 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் 2,560 பேரும், ராஜஸ்தானில் 2,556 பேரும் கொரோனா தொற்றுக்கு இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில், வெளிமாநில தொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு அனுப்பும் பணி தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக தெலங்கானாவில் இருந்து சிறப்பு ரயில் மூலம் சுமார் 1200 தொழிலாளர்கள், ஜார்கண்ட் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 73 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியா முழுவதும் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,159 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல், நாடு முழுவதும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,020 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8,373 லிருந்து 8,889 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மகாராஷ்டிரா சட்டமன்ற மேலவை தேர்தல் மே 21 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.