இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வரும் நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5610 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 3 மாதங்களில் கொரோனாவின் தாக்கம் மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் கிராமப்புறங்களில் கொரோனாவின் தாக்கம் குறைந்திருந்தாலும், நகர் புறங்களில் சற்றும் குறையாமல் அதி தீவிரமாகப் பரவி வருகிறது கொரோனா வைரஸ்.

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாரஷ்டிரா மாநிலத்தில் தான், கொரோனா வைரஸ் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. அந்த மாநிலத்தில், 70,013 பேர் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு இதுவரை 2,362 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் மகாரஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தபடியாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டோரின் பட்டியலில் தமிழகம் 2 வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 23,495 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 187 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், தமிழகத்தில் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா வைரஸ் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், காஞ்சிபுரத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், திருச்சியில் கொரோனா வைரஸ் பாதிப்பால், ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதேபோல், நாட்டில் அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பட்டியலில் தலைநகர் டெல்லி 3 வது இடம் பிடித்துள்ளது. டெல்லி ஆளுநர் அனில் பைஜாலின் அலுவலகத்தில் இன்று 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

டெல்லியில் இதுவரை 20,834 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 523 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

டெல்லிக்கு அடுத்தபடியாக, குஜராத் மாநிலத்தில் 17,217 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு, இதுவரை 1,063 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பட்டியலில் ராஜஸ்தான் மாநிலம் உள்ளது. ராஜஸ்தானில் இன்று மேலும் 171 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 9,271 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,171 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 1,99,757 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை இதுவரை 5,612 ஆக அதிகரித்துள்ளது.