இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,39,237 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,024 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா என்னும் பெருந்தோற்று, மற்ற உலக நாடுகளைப் போல இந்தியாவையும் முடக்கிப்போட்டுள்ளது. இந்தியாவில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரஸ், நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
கொரோனா வைரசால் இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது. மும்பையில் மட்டும் 30,542 பேர் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 988 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 50 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. மகாராஷ்டிராவில் 50,231 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,635 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 14,600 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டிலேயே அதிகம் கொரோனா பாதித்த மாநிலத்தின் பட்டியலில் தமிழ்நாடு மீண்டும் 2 வது இடத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 16,277 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்திற்குப் பிறகு, அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் குஜராத் மாநிலம் 3 வது இடத்தில் உள்ளது. குஜராத்தில், இதுவரை 14,063 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு 858 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
அதேபோல், தலைநகர் டெல்லி திஹார் சிறையில் உதவி கண்காணிப்பாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் தற்போது வரை 13,418 பேர் கொரோனாவல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை அங்கு 261 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் மேலும் 53 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், அங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை தற்போது 1,39,237 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,024 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, இந்தியாவில் நாகாலாந்து மாநிலம் மற்றும் லட்சத்தீவில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை. முன்னதாக சிக்கிம் மாநிலமும் இந்த பட்டியலிலிருந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கு ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.