இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் மெல்ல பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது வேகமாகப் பரவி வருகிறது. இதனால், நாடு முழுவதும் 4 வது முறையாக தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒட்டுமொத்த விதிமுறைகள் மற்றும் தடைகளையும் தாண்டி, நாள்தோறும் புதிய பாதிப்புக்கள் மனிதர்களைத் தொடர்ந்து தொற்றிக்கொண்டே வருகிறது.
இந்நிலையில், இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 35,058 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,249 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அந்த மாநிலத்தில், கொரோனா வைரசிலிருந்த குணமடைந்தோர் எண்ணிக்கை 8,437 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தபடியாக, கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மீண்டும் 2 வது இடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 11,760 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டிலேயே கொரோனா பாதிக்கப்பட்ட பட்டியலில் குஜராத் மாநிலம் 3 வது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,746 ஆக அதிகரித்துள்ளது. அந்த மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 694 ஆக உயர்ந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,054 ஆக உயர்ந்துள்ளது. அங்கு, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், வெளிமாநிலங்களிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய தொழிலாளர்களால் பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 1,01,139 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,029 லிருந்து 3,163 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல், இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 36,824 லிருந்து 39,174 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், பிற உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 7.1 பேருக்கே கொரோனா பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.