இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,237 ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 186 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு கொரோனா வைரஸ் காட்டு தீ போல் வேகமாகப் பரவி வருகிறது. இதனால், ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டு வருவதுடன், ஊரடங்கு காலமும் நீட்டிக்கப்படுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
கொரோனாவின் தாக்கம் குறையாததால் ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 14 வரை இருந்த ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். இதனால், இந்தியாவில் ஊரடங்கை நீட்டித்த முதல் மாநிலம் ஒடிசா திகழ்கிறது.
மேலும், ஜூன் 17 ஆம் தேதி வரை ஒடிசாவில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்த முதலமைச்சர் நவீன் பட்நாயக். ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவையைத் தொடங்க வேண்டாம் என மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராஜஸ்தானில் இன்று புதிதாக 43 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது. இதனால், அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 430 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று ஒரே நாளில் 10 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். இதனால், அங்கு மொத்த பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1297 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த மாநிலத்தின் பட்டியலில் தமிழ்நாடு 2 வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் தற்போது வரை கொரோனாவால் 738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 வது இடத்தில் அதிகபட்சமாக டெல்லியில் 669 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் கொரோனாவினால் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, அங்கு பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அந்த மாநிலத்தில் 361 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹிமாச்சல் பிரதேசத்தில் இன்று ஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என அம்மாநில அரசு கூறியுள்ளது. அதே நேரத்தில், ஹிமாச்சலில் தற்போது வரை 27 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவர் ஒருவர் இன்று உயிரிழந்தார். இதனால். இந்தூரில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
குஜராத்தில் 48 வயது கொரோனா நோயாளி இன்று உயிரிழந்தார். இதனால். அந்த மாநிலத்தில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இதனால், அந்த மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 241 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் கதக் மாவட்டத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர் இன்று உயிரிழந்தார். இதனால், அங்கு கொரோனா பலி எண்ணிக்கை தற்போது 6 ஆக உயர்ந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட போகரோ பகுதியைச் சேர்ந்த 75 வயது முதியவர் இன்று காலை உயிரிழந்தார். இதன் மூலம், அந்த மாநிலத்தில் முதல் பலி நிகழ்ந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியா முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 186 ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,237 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே வருமான வரி, ஜி.எஸ்.டி. சுங்கவரி பிடித்தங்களை விரைவில் திருப்பி அளிக்க நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கொரோனா தாக்கம் காரணமாக 40 கோடி இந்தியர்கள் வறுமையில் தள்ளப்படும் அபாயம் இருப்பதாக ஐ.எல்.ஓ. தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.