உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33,04,381 ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,33,839 பேராக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், உலக நாடுகளின் பொருளாதாரம் எல்லாம் நசுங்கிப்போன நிலையில், உலகம் முழுவதும் வேலையில்லா திண்டாட்டமும் தலை தூக்கி வருகிறது.
அமெரிக்காவில் கொரோனா வைரசுக்குக் கடந்த 24 மணி நேரத்தில் 2,500 பேர் பலியான சோகம் அரங்கேறி உள்ளது. அமெரிக்காவில் மேலும் 30,825 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,95,019 ஆக அதிகரித்துள்ளது. அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் 2,201 பேர் இறந்ததால், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 63,856 ஆக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் உலகிலேயே அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா திகழ்கிறது. அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தோரின் எண்ணிக்கை தற்போது 10,39,144 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், அமெரிக்காவில் வேலைவாய்ப்பில்லாதோர் எண்ணிக்கை தற்போது 3 கோடியாக அதிகரித்துள்ளது. இதனால், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அமெரிக்க அரசும், அந்நாட்டு மக்களும் தவித்து வருகின்றனர்.
இங்கிலாந்து நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 674 பேர் பலியாகி உள்ளனர். இதனால், அந்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டி உள்ளது.
ரஷியாவிலும் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அந்நாட்டில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5,841 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரத்து 498 ஆக அதிகரித்துள்ளது. அங்கு, புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் 2,829 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை என்று கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது.
அதேசமயம், அங்கு இதுவரை கொரோனாவுக்கு 1,073 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன், அந்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரொனா பாதிப்பிலிருந்து 1,333 பேர் குணமடைந்த நிலையில், மொத்தமாகக் குணமடைந்தோர் எண்ணிக்கை 11,619 ஆக உயர்ந்துள்ளது.
தென்கொரியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 10 ஆயிரத்து 774 ஆக உயர்ந்துள்ளது. இதனால், அந்நாட்டில் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33,04,381 ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,33,839 ஆக உயர்ந்துள்ளது.