சென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை, ராயபுரத்தில் 2,000ஐ நெருங்கி வருகிறது.

சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் கார் தொழிற்சாலையின் பணியாளர்கள் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 54 வயது ஆண் ஒருவர் உயிரிழந்தார்.

சென்னை ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க.நகர், தேனாம்பேட்டையைத் தொடர்ந்து தண்டையார்பேட்டையிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது ஆயிரத்தைக் கடந்துள்ளது.

குறிப்பாக, சென்னையில் அதிகபட்சமாக ராயுபுரம் மண்டலத்தில் 1,981 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, அந்த பகுதியில் கொரோனா பாதிப்ப எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

அதேபோல், கோடம்பாக்கத்தில் 1460 பேருக்கும், திரு.வி.க.நகரில் 1188 பேருக்கும், தேனாம்பேட்டையில் 1118 பேருக்கும், தண்டையார்பேட்டை 1044 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அண்ணா நகரில் 867 பேருக்கும், வளசரவாக்கத்தில் 703 பேருக்கும், அடையாறு மண்டலத்தில் 579 பேருக்கும், அம்பத்தூரில் 446 பேருக்கும், திருவொற்றியூரில் 300 பேருக்கும், மாதவரம் பகுதியில் 223 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 173 பேருக்கும், பெருங்குடியில் 168 பேருக்கும், மணலியில் 142 பேருக்கும், ஆலந்தூரில் 121 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்றின் எண்ணிக்கை 10,582 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், சென்னையில் கொரோனா பலி எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல், தமிழகத்தில் ஒட்டுமொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சென்னையின் மட்டும் 72 சதவிகிதமாக உள்ளது. ஒட்டுமொத்தமான பலி எண்ணிக்கையில், சென்னையில் இறந்தவர்களின் பங்கு 70.3 சதவிகிதமாகவும் உள்ளது.

மேலும், சென்னையில் கொரோனாவால் ஆண்கள் 60.2 சதவீதம் பேரும், பெண்கள் 39.96 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.