சென்னையில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால், சென்னை வாசிகள் கடும் பீதியடைந்துள்ளனர்.
சென்னையில், இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதனால், சென்னை மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
இதனிடையே, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த, 3 முதுநிலை மாணவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் இருவர், மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி இருந்ததால், விடுதி அறைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு மாணவரின் வீடு உள்ள பகுதிகள், முற்றிலுமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே, முதுநிலை மாணவர் ஒருவருக்கு, நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அங்குள்ள இதய சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டது.
மேலும், சென்னையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, சென்னையில் கொரோனா வைரசுக்கு சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் ஒருவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த 20 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். மருத்துவரின் உடலை கொண்டு வந்த வாகனத்தை, அப்பகுதி மக்கள் அடித்து உடைத்ததால், போலீசார் அங்கு அதிக அளவில் குவிக்கப்பட்டனர். இதனால், அந்த பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் இன்று மட்டும் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதில் 50 பேர் சென்னை சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால். சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 285 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் நேற்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னை மக்கள் கொரோனா பீதியில் உரைந்துபோய் உள்ளனர்.